வேலூரில் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாத, ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பணியிடை நீக்கம் செய்து உத்தரவு:


சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து, கடந்த 12ம் தேதி உற்பத்தி செய்யப்பட்ட தயிர் பாக்கெட்டுகளை முகவர்களுக்கு அனுப்பப்படவில்லை. இதனால், வழக்கமாக ஆவின் தயிர் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தும் பயனாளர்கள் தயிர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பான புகாரின் பேரில்,  வேலூர் ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் நடத்திய விசாரணையில், தயிர் தாமதமான அன்றைய தினம் பணியில் இருந்த துணை மேலாளர் உமா மகேஸ்வரராவ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


பிரச்னை என்ன?


ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஓராண்டாக தாங்கள் முன்வைத்து வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த 12ம் தேதியன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வேலூர் மாவட்ட ஆவின் பால் பண்ணையிலிருந்து விநியோகம் செய்யப்பட வேண்டிய தயிர் பாக்கெட்டுகளின் விநியோம் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதாவது, வேலூர், ஆற்காடு, வாலாஜா, வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆரணி, ஆம்பூர், குடியாத்தம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தயிர் பாக்கெட்டுகளின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.


பயனாளர்கள் அவதி:


முகூர்த்த நாளான அன்று பால் முகவர்கள் சற்று கூடுதலாகவே ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் கொடுத்து இருந்தனர். ஆனால், நீண்ட நாளாக ஒப்பந்த பணியாளர்கள் முன்வைத்து வந்த கோரிக்கைகளை, ஆவின் நிர்வாகம் பரிசீலிக்காததால் கடந்த 12ம் தேதியன்று திடீரென அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், முகவர்களுக்கான தயிர் விநியோகம் தடைபட்டது. அவர்களை நம்பி இருந்த பயனாளரளும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பான விசாரணையின் அடிப்படையில் தான், தயிர் தாமதமான அன்றைய தினம் பணியில் இருந்த துணை மேலாளர் உமா மகேஸ்வரராவ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


வேலூர் ஆவின் பண்ணை:


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட  ஒன்றிய பால் பண்ணையில்  நாள் ஒன்றிற்கு, 93 ஆயிரம் லிட்டர் பால், ஐந்தாயிரம் லிட்டர் தயிர் மற்றும் ஆயிரத்து 500 பாட்டில்  மோர் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், வேலூருக்கு 75 ஆயிரம் லிட்டர், திருவண்ணாமலைக்கு 13 ஆயிரம் லிட்டர், திருப்பத்தூருக்கு 5 ஆயிரம் லிட்டர் பால், 21 வாகன வழித்தடங்கள் மூலம் பால் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.