செய்யாறில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகையை திருடிய பலே ஆசாமிகள் 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகையை அதிரடியாக காவல்துறையினர் மீட்டனர்.


உடைக்கப்பட்ட பூட்டு:


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் ஆரணி சாலையில் நேரு நகரை சேர்ந்தவர் கணேஷ் வயது (33). இவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி வயது 28) இவர் செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.


இந்நிலையில் கணேஷ் கடந்த ஜூலை 17-ம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டின் மேல்மாடி அறையில் படுத்து தூங்கி உள்ளனர். மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில் கலைவாணி வழக்கம்போல் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது, வீட்டின் வெளிப்புறம் கேட் மற்றும் மெயின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து கலைவாணி அதிர்ச்சி அடைந்தார்.


 




பீரோ உடைத்து நகை கொள்ளை 


உடனடியாக ஓடிச்சென்று கணவர் கணேஷிடம் கூறியுள்ளார். இருவரும் வேகமாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. இது குறித்து உடனடினயாக செய்யாறு காவல்நிலையத்திற்கு கணேஷ் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் துணை ஆய்வாளர் சங்கர் மற்றும் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையில் பீரோவில் இருந்த 55 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 1.50 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். 


 



 


கொள்ளையர்கள் கைது


அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்பட்டைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவம் தாலுகா, திம்மலை கிராமத்தினை சேர்ந்த செல்வராசு வயது (41), திருவண்ணாமலை மாவட்டம் செட்டிபட்டி கிராமத்தினை சேர்ந்த சுதாகர் வயது (27), செட்டிபட்டி கிராமத்தினை சேர்ந்த மணிகண்டன்.வயது (37), ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


மேலும் அவர்களிடமிருந்து 17 சவரன் நகைகளை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து செல்வராசு, சுதாகர், மணிகண்டன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் சிறையில் அடைத்தனர். வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே சத்தம் இல்லாமல் பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.