திருவண்ணாமலை வ.உ.சி நகர் 10-வது தெருவை சேர்ந்த வாலிபர் விஜய் 25 வயதான இவர் கடந்த மாதம் 10-ம் தேதி தண்டராம்பட்டு பகுதியில் பெயிண்டர் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை வீட்டிற்கு விஜய் திரும்பவில்லை, இதனால் விஜயின் தொலைபேசிக்கு போன் செய்துள்ளனர். தொலைபேசி ஆப் என வந்துள்ளது.


 


அதன் பிறகு காணாமல் விஜய்யை அவருடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவந்துள்ளனர். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை, பின்னர் காணமல் போன விஜயின் தாய் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை, இந்நிலையில் விஜய் கடைசியாக நண்பர் அருண் என்பவருடன் தொலைபேசியில் பேசிவிட்டு அவருடன் சென்றதாக கூறப்படுகிறது. 


 




அழுகிய நிலையில் சடலம்:


இதையடுத்து காவல்துறையினர் அருணை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி தீவிர விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.


அப்போது விஜயின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. மேலும் பிணம் மிகவும் அழுகி பாதியாக இருந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுடைய உதவியுடன் கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காவல்துறையினர் அருணிடம் விசாரணை நடத்தினர். 


 


 




 


இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது;


விஜய்க்கும், அருணுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அவர்கள் இருவரும் அய்யம்பாளையம் புதூர் பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரம் அடைந்த அருண் அவர் வைத்திருந்த கத்தியால் விஜயை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்று அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். விஜய் எப்படியும் கிணற்றில் இருந்து வெளியே வந்து விடுவார் என்று அங்கிருந்து அருண் சென்று உள்ளார். இவ்வாறு அருண் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்டதற்கு நண்பனையே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.