திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முதலீடு செய்தனர். தீபாவளி சேமிப்பு திட்டம், பொங்கல் சேமிப்பு திட்டம், தங்கம் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் அந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளது. திடீரென அந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இந்த தனியார் நிறுவனத்தின் முகவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தனியார் நிதி நிறுவனத்தில் செயல்பட்டு வந்த 45-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் பரவியிருந்தது. இந்த தகவல் குறித்து தகவல் அறிந்த கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் தனியார் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முகவர்கள் மனு அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த பொருளாதர குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
செய்யாறு தலைமிடமாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்தோம். அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் பிறரையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்குமாறு தெரிவித்தனர். மேலும் நீங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தால் உங்களுக்கு ஒரு திட்டத்தின் சீட்டு தொகை வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி நாங்களும் முகவர்களாக செயல்பட்டு ஏராளமான பொது மக்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தோம் திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தற்போது எங்கள் மூலம் பணம் செலுத்திய பொதுமக்கள் எங்களிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்கின்றனர். நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம். திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, கண்ணமங்கலம், ஆரணி, போலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்த நிறுவன நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். எனவே மக்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்னைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்னைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.