திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பளாராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவுக்கு வணிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி அளிக்கையில்,  தமிழ்நாடு முழுவதும் 2017-18-ம் ஆண்டுகளுக்கான ஜி.எஸ்.டி. கணக்குகள் முடிக்கப்பட்டு ஒவ்வொரு கடையாக நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டு வட்டி வசூலிப்பது போல் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யை அதிகமாக கட்டக்கூடிய மாநிலத்தில் தமிழகமும் ஒன்று வணிகர்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடிய ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்து விரைந்து சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.


 




தொடர்ந்து ஜி.எஸ்.டி. வணிகர்களை கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் என்றால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மறுபரிசீலனை செய்யக்கூடிய நிலைமை ஏற்படும். திடீரென 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறுகிய காலம் அவகாசம் கொடுத்து செல்லாது என அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 10 தாள்கள் அதாவது 20 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிப்பு வெளியாகிய போது மக்களிடம் தடுமாற்றம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அப்போது வியாபாரிகள் மனிதாபிமானத்தோடு 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பின்னர் அந்த பணத்தை வங்கியில் செலுத்தினோம். அப்போது ஆட்சியில் இருந்த அரசு வருவாய்த்துறையின் மூலம் நோட்டீஸ் அளித்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தது. தொடர்ந்து இது போன்ற நிலைகள் தற்போது இருக்குமேயானால் வியாபாரிகள் மத்தியில் வியாபாரம் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


 




கால நீட்டிப்பு வேண்டும் எனவே மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கியோடு தொடர்பு கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும். நிறைய சிறிய குடும்பங்கள் மற்றும் சிறிய கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சிறு சேமிப்பாக வைத்து உள்ளனர். அவற்றை மாற்றுவதற்கு கால நீட்டிப்பு செய்து தர வேண்டும். மேலும் வணிக கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வணிகர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். கால நீட்டிப்பு செய்ய வில்லை என்றால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து மனு பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.