திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் 32 வயதான வடிவேல், இதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் 35 வயதான சங்கர், மாணிக்கம் மகன் 43 வயதான ஆனந்தன், சின்னத்தம்பி மகன் 32 வயதான சிவராமன், சேட்டு மகன் 37 வயதான பிரகாஷ், ஆகிய இவர்கள் அனைவரும் நண்பர்கள். இவர்கள் ஐந்து நபர்களும் தங்கள் கிராமத்தின் ஊர் திருவிழாவை முன்னிட்டு சேத்துப்பட்டிற்கு காரில் பட்டாசு மற்றும் வானவேடிக்கைகள் வாங்குவதற்கு சென்றனர். சேத்துப்பட்டில் கோவில் திருவிழாவிற்கு தேவையான உபோய பொருட்கள், பட்டாசு வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது சேத்துப்பட்டு அடுத்த கிழக்கு மேடு வரும்போது எதிரே போளூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலை ஓரம் இறங்கி நின்றது.
பேருந்து மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த காரில் பயணம் செய்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன், பிரகாஷ் ஆகிய ஐந்து நபர்களும் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர். இதில் பிரகாஷைத் தவிர மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். உடனடியாக பேருந்தில் பயணித்தவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பிரகாஷை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த அதே நேரத்தில் பேருந்துக்கு எதிரே இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் விபத்து நடக்கபோவதை அறிந்ததும் இருசக்கரத்தை விட்டு விட்டு இறங்கி ஓடிவிட்டார்.
இதனால் இருச்சக்கர வாகனம் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த சேத்துபட்டு காவல்துறையினர் விரைந்து வந்து விபத்தில் பலியான நான்கு பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு அண்ணாதுரை ஆகியோர் நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் திருவிழாவிற்கு வெடி பொருட்கள் வாங்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.