ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். இந்த கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் காவல்துறையினர் 24 மணிநேரம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி கிருஷ்டியான் பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தேவி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது காவல்துறையினர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் சிறிய வகையான லெதர் பைகள் இருந்தது. இதையடுத்து ஓட்டுனரை அமர்ந்து வந்த கேபின் பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சீட்டுக்கு அடியில் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து லாரியிலிருந்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த கார்த்திக் வயது (28), திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லாண்ட குமார் வயது (33) என்பதும் இவர்கள் கொல்கத்தாவில் இருந்து லெதர் பைகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு கொண்டு செல்லும் போது கஞ்சாவை வேலூர் மாவட்ட எல்லையில் வேறு கும்பலிடம் கொடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 23 கிலோ கஞ்சாவுடன் லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கஞ்சாவை கொண்டு செல்ல ஒரு கும்பல் காரில் வேலூரில் தயார் நிலையில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது . உடனடியாக காவல்துறையினர் பிடிபட்டவர்களை வைத்து காரில் உள்ள அந்த கும்பலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கஞ்சாவை பெற்று கொள்ளுங்கள் என கூற அந்த கும்பலை வரவைத்துள்ளனர்.
பின்னர் அந்த கும்பலும் காரில் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்து காவல் துறையினர் காரில் இருந்த மூன்று நபர்களையும் வளைத்தனர். அந்த மூன்று நபரை பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த மாடசாமி வயது (25), பிரேம்குமார் வயது (24) தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வயது (19) ஆகிய மூவரையும் ஆந்திராவில் இருந்து சரக்கு லாரிகளில் வரும் கஞ்சாவை வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 23 கிலோ கஞ்சா லாரி மற்றும் காருடன் 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்