திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் வசித்து வரும் இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பரமசிவம் என்பவருடைய மகன் நரேஷ். இவர் ஆசிரியராக பணி புரிவதாக பொய் சொல்லி விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் வசந்தா தம்பதியினரின் இரண்டாவது மகள் ஜெயபாரதியை கடந்த 2017 ஆம் ஆண்டு 16 சவரன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நரேஷ் எந்த வேலைக்கும் போகாமல் குடிபோதையில் வரதட்சனை கேட்டு அடிக்கடி ஜெயபாரதியை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று நரேஷ் அவரது அம்மா அக்கா ஆகியோருடன் இணைந்து ஜெயபாரதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி மாட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஜெயபாரதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக நரேஷ் ஜெயபாரதியின் தம்பி தட்சிணாமூர்த்திக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.


 




தகவல் அறிந்த தட்சிணாமூர்த்தி அவரது அம்மா அப்பா மற்றும் உறவினர்கள் ஓலைப்பாடி கிராமத்திற்கு சென்று பார்த்தபோது தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜெயபாரதியின் தந்தை தாய் தம்பி மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு சென்று ஜெயபாரதியின் உடலை பார்த்தபோது முகம், தாடை , வாய் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டும் முகம் வீக்கமாக இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர் . இதுதொடர்பாக பெற்றோர் வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் வேட்டவலம் காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யாமல் உள்ளனர். அதனைத் தொடர்ந்து நரேஷ் மற்றும் அவருடைய பெற்றோர் யாரும் இதுவரை வந்து ஜெயபாரதியின் உடலை பார்க்காமல் கிராமத்திலும் இல்லாமல் தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளனர்


 




ஜெயபாரதியின் பெற்றோர் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர், கொலை வழக்காக பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் காவல்துறையினரை கண்டித்தும் நரேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மகளை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி தரையில் புரண்டு அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை காவல்துறையினர் நரேஷ் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் காவல்துறையினரும் வருவாய்த் துறையும் கொலையாளிக்கு துணையாக இருப்பதாக கருதி 50-க்கும் மேற்பட்டோர் தரையில் புரண்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்யும் வரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயபாரதியின் உடலை வாங்கப் போவதில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.