தமிழகத்தில் கொரோனை வைரஸ் தொற்று  பரவியதிலிருந்து ஆரம்ப காலகட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று இரண்டாம் அலையின் தாக்கத்தின் போது பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. மேலும் தற்போது வரை மூன்று மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவே தொற்று உறுதி செய்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று மட்டும் 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை காட்டிலும் குறைவு ஆகும். வேலூர் மாவட்டத்தில் இதுவரை உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 50,096 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 



 

இதில் 48,850 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 108 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் மற்றும் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர். இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்நிலையில் இதுவரை 1138 பேர் இறந்துள்ளனர். இன்று மற்றும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசியை சுமார் 3 லட்சத்தி 81 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை  அதிகரிக்க வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டும் இன்று தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாமும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. 



 

திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்த வரை இன்று இரண்டாவது நாளாக யாருக்கும் தொற்று உறுதியாகாத நிலையில் தொற்று பாதிப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லாதபட்சத்தில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 29,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28,725 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 626 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியைப் பொறுத்தவரை இதுவரை மாவட்டத்தில் 72% பேருக்கு முதல் தவணையும், 40% பேருக்கு இரண்டாம் தவணையும் போடப்பட்டுள்ளது.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று யாருக்கும் உறுதியாகவில்லை. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 43,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42,722 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 25 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 775 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்ட  படுக்கைகள் காலியாக உள்ளது. தடுப்பூசியைப் பொறுத்தவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினசரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். முதல் தவணையை 7 லட்சத்தி 95 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் தவணையை 5 லட்சத்தி 83 ஆயிரம் பேருக்கும் செலுத்தியுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசியையும் சேர்த்து 2 லட்சத்தி 13 ஆயிரம் பேருக்கு செலுத்தியுள்ளனர். நாளையும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

 

பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மூன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிப்போம், முகக்கவசம் அணிவோம், தடுப்பூசியை செலுத்திக்கொள்வோம், கொரோனாவை வெல்வோம் !