திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் காலனி பகுதியை சேர்ந்த ராம்குமாரின் மனைவி கல்பனா (25). இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கலசபாக்கம் அருகே உள்ள சிறுவள்ளூர் அரசு பள்ளியில் கல்பனா தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கல்பனா வழக்கம் போல் சிறுவள்ளூர் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரை அழைத்து வருவதற்காக மாமனார் மொட்டையன் (55) புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் சென்று கல்பனாவை அழைத்து கொண்டு வந்தார்.  கலசபாக்கம் அருகே உள்ள அருணகிரிமங்கலம் பகுதியில் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது.  இதில், கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மொட்டையன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாமனார்-மருமகள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் அருள் (34) மற்றும் பிளம்பர் பூமிநாதன் (35)  இருவரும் வீடு கட்டுமான பணிகளுக்காக இணைந்து வேலைக்கு செல்வது வழக்கம். அதன் படி, ஆரணியில்  புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்ள விடியற்காலையில் சாத்தனூரில் இருந்து போளூர் வழியாக ஆரணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அருள் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். பூமிநாதன் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார்.



இந்நிலையில் இரவு 9 மணியளவில் போளூர் பைபாஸ் சாலை வழியாக இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது. வேலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராமல் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பூமிநாதனை அப்பகுதியினர் மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் போதே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 


பெட்ரோல் விலை உயர்வு - தஞ்சையில் பாஜக நடத்திய குதிரை வண்டி பயணத்தால் போக்குவரத்து நெரிசல்