திருவண்ணாமலையில் வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து கையிருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம், புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் உள்ள கணினியில் நோயாளிகள் விவரம் குறித்து பதிவு செய்யும் பொழுது நீண்ட நேரம் ஆவது குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது உள்நோயாளிகள் பிரிவில் சென்ற மாவட்ட ஆட்சியர் அப்பொழுது நோயாளி ஒருவர் தரையில் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் உடனடியாக அவருக்கு இடம் ஒதுக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.


 




அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பிரிவிற்கு சென்ற பொழுது தரையில் தண்ணீர் கொட்டி துடைக்கப்படாமல் இருந்ததை கண்டு ஒப்பந்ததாரரை அழைத்து உடனடியாக இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் எச்சரித்தார். மேலும் நோயாளி ஒருவர் மருத்துவர் பரிந்துரை சீட்டு இருந்தும் தனக்கு 28 நாட்களுக்கு மாத்திரை வழங்காமல் மருந்தக ஊழியர்கள் அலைக்கழிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக மருந்தகம் சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது கணினி மூலம் பெறப்பட்ட மருந்து சீட்டுக்கு 28 நாட்களுக்கு மருந்து வாங்குவதாகவும் மருத்துவர்கள் கையொப்பமிட்ட சீட்டுக்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மருத்துவர்கள் கையொப்பம் இட்ட சீட்டை கொண்டு 28 நாட்களுக்கும் மருந்து வழங்க வேண்டும் எனவும் நிர்வாக குறைபாடு காரணமாக நோயாளிகளை அலைக்கழிக்க கூடாது என்று தெரிவித்தார். 


 




அதனைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்; 


நோயாளிகளுக்கு மொத்தமுள்ள படுக்கை வசதிகள் குறித்தும். நோயாளிகளின் மாதாந்திர பதிவு புள்ளி விவரம், கோமா, பக்கவாதம் பாதித்தவர்களின் ஆண்டுக்கணக்கில் உள்ள புள்ளி விவரம் அதுமட்டுமின்றி தீக்காயங்களால் பாதித்தவர்கள் பிரிவு, அவசர கால பிரிவு, தாய் வார்டு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு. மாவுக்கட்டு போடும் இடம். செயல்வழி சிகிச்சை பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, எக்ஸ்-ரே, டிஜிட்டல் எக்ஸ்-ரே பிரிவிகளில் நோயாளிகளிடம் பெறப்படும் கட்டணம் முறை குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலர்களிடம் நோயாளிகளுக்கு தங்கும் இடம், புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் மருந்துவர்கள் பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைக்கு வருகைத்தரும் நோயாளிகளை அன்பாகவும், ஆதராகவும் தங்களுடைய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.