சிற்றுண்டி தரத்தை ஆய்வு செய்த முதலமைச்சர்:


கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலையில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, காந்தி நகர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான உணவைத் தொடர்ந்து தரமான முறையில் செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மாணவர்களின் வருகை தொடர்பான ஆவணங்களையும் அவர் சரிபார்த்தார்.



மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய முதலமைச்சர்:


தொடர்ந்து, அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சிற்றுண்டியின் தரத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு தனது கைகளாலேயே உணவளித்து மகிழ்ந்தார். மேலும், அனைவரும் நன்றாக சாப்பிட்டு விட்டு, நன்கு படிக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.


ஆய்வு:


பின்பு காலை உணவு திட்டம், சுகாதார நிலைய கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சாதாரணமாக காலையில் நடைபயிற்சிக்கு செல்வதை போன்றே புறப்பட்டு, திடீரென முதலமைச்சர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


ஆலோசனை:


முன்னதாக, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள வேலூர் சென்றார்.  தொடர்ந்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் ஆலோசனை நடத்தினார்.