பல்வேறு திட்டங்களை தொடங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் இரண்டு நாள் பயணமாக வேலூருக்கு புறப்பட்டு சென்றார். 


"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டம் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் வேலூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக ரயில் மூலம் வேலூர் சென்றுள்ள முதலமைச்சர், 12 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை துவங்கி வைக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் வேலூரில் மட்டும் 7 ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கட்டமைப்ப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கு 784 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக இன்று காலை இல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் காட்பாடியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.


இரண்டு நாள் பயணமாக வேலூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 2 நாட்களுக்குள்ளாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை சந்தித்து ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வில் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.


அதேபோல் மாவட்ட விவசாயிகள் மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சந்திக்கிறார். மேலும், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்க இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம்  வேலூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.