திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது (35). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது அக்காள் மகளான ராஜேஸ்வரி என்பவரை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கோவேஷ் கண்ணன் வயது (4) மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெங்கடேசன் அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள தனது மற்றொரு அக்கா விஜயகுமாரி என்பவர் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, கடந்த 18-ஆம் தேதி இரவு ராஜேஸ்வரியும், அவரது சகோதரரான காஞ்சிபுரம் மாவட்டம், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் வயது (24) என்பவரும் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் ராஜேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த தூசி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தூசி ஆய்வாளர் சிலம்பரசன் வழக்குப்பதிந்து ராஜேஸ்வரி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி பிரபாகரன் நேற்று முன்தினம் மாலை அப்துல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் கலாவிடம் சரண் அடைந்தார். பிரபாகரனை தூசி காவல்துறையினரிடம் கிராம நிர்வாக அலுவலர் கலா ஒப்படைத்தார்.
காவல்துறைக்கு பிரபாகரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: எனது மாமாவுக்கும் அக்கா ராஜேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதுகுறித்து நான் கேட்டபோது எனது அக்கா, வேறு ஒருவருடன் தகாத பழக்கம் வைத்துள்ளது தெரியவந்தது. அவரை நானும், எனது மாமாவும் பலமுறை கண்டித்துள்ளோம். தகாத பழக்கம் குறித்து ஊரில் இருப்பவர் ஆபாசமாக பேசுகிறார்கள். வெளியே தலை காட்ட முடியவில்லை. அந்த பழக்கத்தை கைவிடும்படி பலமுறை கூறினோம். ஆனால் அவர் கைவிடவில்லை.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்காவுடன் எனது மாமா சண்டை போட்டுவிட்டு, அழிவிடை தாங்கியில் உள்ள மற்றொரு அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையறிந்த நான், கடந்த 10 நாட்களாக எனது அக்கா வீட்டில் தங்கி அவருக்கு அறிவுரை கூறிவந்தேன். கடந்த 18-ஆம் தேதியும் எனது அக்காவிடம். தகாத பழக்கத்தால் நமக்கும், இருவரின் குடும்பத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படும். இங்கு இருக்க பிடிக்கவில்லையென்றால் நமது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம், சங்கராபுரத்துக்கு சென்றுவிடலாம் என அழைத்தேன். ஆனால் எனது அக்கா வரவில்லை, பலமுறை வற்புறுத்தியும் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை பயமுறுத்துவதற்காக அவரது தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் மோதினேன். மேலும், அவரது கழுத்தை நெறித்தேன். அவர் மயங்கி கீழே விழுந்தார். மறுநாள் காலையில்தான் அவர் இறந்தது தெரியும். எனது அக்கா கொலையானதை காவல்துறையினர் கண்டுபிடித்து இருப்பார்கள் என எண்ணி, விஏஒவிடம் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர், பின்னர், அவரை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.