கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உள்ள தேன்கனிகோட்டை அருகே பேளாளம் - நெல்லுமார் சாலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அல்லி உல்லாகான் வயது (50) என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் ஒன்று உள்ளது. இந்த பண்ணை தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.


இந்த குதிரைகள் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 வயது மதிக்கத்தக்க பெண் குதிரை ஒன்று சில நாட்களாக கடும் சேட்டை செய்து வந்துள்ளது. இதனால் பணியாளர்கள் அந்த குதிரையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை இதனால் குதிரையின் உரிமையாளர் பணியாளர்களிடம் குதிரையின் முன்னங்கால்களை இரண்டையும் கட்டிப்போட்டுள்ளனர்.


 




அதனைத்தொடர்ந்து கடந்த 01 ஆம் தேதி அதிகாலை பண்ணைக்குள் நுழைந்த மர்மவிலங்கு ஒன்று குதிரைகளை தாக்க முயன்றுள்ளது. அப்போது அனைத்து குதிரைகளும் மர்ம விலங்கிடமிருந்து உயிர்பிழைக்க கட்டி வைக்கப்பட்ட கயிற்றை அகற்றி விட்டு அந்த மர்ம விலங்கிடம் இருந்து குதிரைகள் தப்பித்து ஓடியுள்ளது. இதில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த 5 வயது பெண் குதிரை நடக்க முடியாமல் அங்கேயே நின்று உள்ளது. அப்போது மர்மவிலங்கு அந்த குதிரையின் மீது பாய்ந்து கழுத்தை கடித்து குதறி அதனை கொன்று உடலை சாப்பிட்டு சென்றது. காலையில் வழக்கம்போல பண்ணைக்கு வந்த பணியாளர்கள் குதிரைகளை கட்டிவைத்துள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது பெண் குதிரை ரத்த வெள்ளத்தில் குதிரையின் உடல் குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 


இதுகுறித்து உடனடியாக பண்ணையின் உரிமையாளர் இடமும் மற்றும் தளி வனத்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளானர். இதனை அறிந்த தளி வனதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் குதிரையை தாக்கி கொன்றது சிறுத்தையா அல்லது புலியா என வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் உயிரிழந்த குதிரையில் உடலை அங்கிருந்து எடுக்காமல் அந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுத்தை ஒன்று குதிரை பண்ணைக்குள் புகுந்து அங்கு உயிரிழந்து கிடந்த குதிரையின் உடலை சாப்பிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் 5 வயது பெண் குதிரையை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தளி, பேளாளம், நெல்லுமார், ஆச்சுபாலம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.