சுட்டெரிக்கும் வெயில் காலத்தில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளிகள் கடந்த 3 மாதங்களாகத்தான் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ளன. வழக்கமாகப் பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டும் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து விடும். கோவிட் காரணமாகப் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போன நிலையில், இந்த முறை மே 5ஆம் தேதிக்குப் பிறகே ஆண்டு இறுதித்தேர்வுகள் தொடங்குகின்றன. 


பள்ளிக் கல்வித்துறையில் நிலவும் குழப்பங்கள்


கோடை விடுமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கே வர வேண்டும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே இன்று, மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. 


அதேபோல 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வு என்று அழைக்கப்படும் 3ஆம் பருவத் தேர்வுகள் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் நடைபெறுகின்றன. 


மாவட்டங்கள்தோறும் இந்தத் தேர்வு, வெவ்வேறு தேதிகளில் தொடங்குகிறது. கோவை, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (மே 5) தேர்வு தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மே 6ஆம் தேதியும் ஈரோடு மாவட்டத்தில் மே 7ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த சூழலில் தேர்வன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்ற அறிவிப்பு அவசியமா என்று கேள்வி எழுந்துள்ளது. 




இதற்கிடையே இன்று (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடை வெயில் தொடங்கி, சுட்டெரித்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் பின்மதியம் 3 மணி வரை யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சூழலில், காலை தேர்வுக்கு வரும் மாணவர்கள் மதிய வெயிலில் கிளம்ப வேண்டும். மதியத் தேர்வுக்கு மாணவர்கள் வெயில் நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளது.


இந்த நிலையை மாற்றி, இறுதித் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் மதிய சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சதிஷ்குமார். 


இதுகுறித்து அவர் 'ஏபிபி நாடு'விடம் கூறும்போது, ''வழக்கமாக இந்த நேரத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு, கற்றல் இழப்பைக் காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். உண்மை என்னவெனில் மாணவர்களுக்கான விடுமுறை என்பது இறுதித் தேர்வுக்கான விடுமுறையே அல்ல. கோடை வெப்பத்தில் குழந்தைகள் சுகாதாரப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் விடுமுறை அளிக்கப்படுகிறது.




’சத்துணவை உறுதி செய்க’


கடும் கோடையில் மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வந்து மாலையில் வீடு திரும்புவதே சிரமம். இந்த சூழலில், காலை 9 மணிக்கு வருகை தரும் மாணவர்கள் தேர்வு முடித்து மதியம் 1 மணிக்குப் பிறகு வீடு திரும்பவதும், மதியத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் உச்சி வெயில் நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிவதும் பெரும் சவால் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதேபோலப் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


ஒருசில பள்ளிகள் தவிர்த்துப் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. கழிப்பறை வசதியும் சரியாக இல்லை. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி மின்விசிறிகள் இருப்பதில்லை. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுப் போக்குவரத்து, சைக்கிள் உள்ளிட்டவை மூலமே பள்ளிக்கு வர வேண்டியுள்ளது.


வரலாறு காணாத வெயில் கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் நேரத்தில், நீர்க்கடுப்பு, சளி, காய்ச்சல், தலை சுற்றல், அம்மை நோய், சரும நோய், நீர்ச்சத்துக் குறைபாடுகள், ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம்  ஏற்படத் தொடங்கியுள்ளதாக சக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இந்தக் கல்வியாண்டில் மே 13ஆம் தேதிதான் கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றில் (மே 4) இருந்து 8 வேலை நாட்களே உள்ள நிலையில், தேர்வுகள் 6 நாட்கள் நடைபெற உள்ளன. இந்த சூழலில் தேர்வன்று வந்தால் போதும் என்ற அறிவிப்பு தேவையா?




அக்னிப் பரீட்சை அவசியமா?


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேர்வு மூலம் மாணவர்களை மதிப்பிட வேண்டிய அவசர, அவசியம் என்ன? அக்னி வெயில் காலத்தில் இறுதித் தேர்வுகள் அவசியமா?


இதனால் 1 முதல் 9ஆம் வகுப்பிற்கு தேர்வு குறித்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கற்றல் இழப்பைச் சரிசெய்ய நினைத்தால், அவர்களுக்குப் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டபிறகு தேர்வை வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் மே 13 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிசெய்ய அறிவுறுத்தலாம்'' என்று சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.