வேலூர் மாவட்டத்தில் அரும்பருதி, பெருமுகை ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இதுவரையில் இந்த மணல் குவாரிகளில் லாரிகளில் மணல் அள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் மாட்டு வண்டிகளிலும் மணல் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியர் குமார வேல்பாண்டியன் அனுமதி அளித்துள்ளார் . இதனைத்தொடர்ந்து இன்று காலையில் பெருமுகை குவாரியில் மணல் வாங்குவதற்காக மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அப்போது மணல் குவாரிகளில் இருந்த கனிமவளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒரு மாட்டு வண்டிற்கு ரூபாய் 800 கட்டணம் என விலை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் மாட்டு வண்டி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம், 'கால் யூனிட் மணல் 800 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளீர்கள். மாட்டுவண்டி காரர்களை ரூபாய் 1000க்கு பொதுமக்களுக்கு விற்கும்படி கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் குறைந்த விலைக்குத்தான் பொது மக்களுக்கு விற்கிறோம். ரூபாய் 1000-க்கு விற்றாலும் மாடுகளுக்கான தீவனம், எங்களது உழைப்புபோக கூடுதலாக 500 செலவு ஆகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ரூபாய் 800 கட்டணத்தை 250 ஆக குறைக்கவேண்டும்' என மாட்டுவண்டி உரிமையாளர்கள் கேட்டுள்ளனர்.
இதற்கு அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் அலட்சியம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பாலாற்றில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும்படி துணை காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டத்தைகை விட்டனர். அதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மாட்டுவண்டி உரிமையாளர்கள் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது; நாங்கள் அனைவரும் அரும்பருத்தி பெருமுகை பாலாற்றில் தமிழக அரசின் மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மணல் அள்ளப்பட்டு வேலூர் பெருமுகையில் அமைந்துள்ள அரசு விற்பனை கிடங்கில் சேகரிக்கப்பட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 7 மாதங்களாக லாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் மட்டுமே மணல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு தற்பொழுது மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் மணல் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாட்டுவண்டி தொழிலாளர்களின் அலைபேசி எண்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு R.F.ID Tag பொருத்தி மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.ஒரு மாட்டுவண்டி (0.25 யூனிட் மணல் விலை ரூ.800(வரிகள் உள்பட) என நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இதனையடுத்து, விலை நிர்ணயத்தை 800-ல் இருந்து மாற்றி 250 க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து மணல் குவாரியில் போராட்டம் நடத்தினர். இந்த ரூ.800 தொகைக்கு மணல் விலை நிர்ணயித்தால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆகவே அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைத்து ரூ.250 நிர்ணயிக்க கோரி சுமார் 50-க்கும் மேற்பட்ட மாண்டு வண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.