தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்கப் பணம் என  வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறும் வகையில் நாளொன்றுக்கு 200 ரேஷன் அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களுக்கு குறிப்பிட்ட டோக்கன்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.


 




 


அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் 12 கூட்டுறவு ரேஷன் கடைகளில் 8450 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் ஓம் சக்தி நகர், பொன்னுசாமி நகர், செல்வம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்த டோக்கன் வினியோகம் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைப்பெற்றது. பொங்கல் பரிசு டோக்கன் 8 தேதி வரை வழங்கப்படும். இதில் நாளொன்றுக்கு 200 முதல் 250 டோக்கன் வரை விநியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


 




 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியதாவது:


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1627 நியாய விலை கடைகளை சேர்ந்த 7 லட்சத்து 85 ஆயிரத்து 760 ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற உள்ளனர். ஒரு ரேஷன் அட்டைக்கு ஒருவர் மட்டுமே பரிசு தொகுப்பு வாங்க வர வேண்டும். பரிசு தொகுப்புகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்படும். பரிசு தொகுப்பு பெறுவதற்கு வருகிற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 041750-233063 என்ற எண்ணிற்கோ அல்லது மாவட்ட அளவில் தாலுகா வாரியாக உதவி ஆட்சியர் நிலையில் நியமனம் செய்யப்பட்டு உள்ள கண்காணிப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.