Tirupati - Katpadi: திருப்பதி - காட்பாடி இடையேயான ஒற்றை ரயில்வே இருப்புப் பாதையை, இரட்டிப்பாக்க மத்திய அரசு ஆயிரத்து 332 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
காட்பாடி - திருப்பதி ரயில்வே இருப்புப் பாதை:
ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் முக்கியமான 104 கிலோமீட்டர் ஒற்றைப் பாதையான திருப்பதி-பகாலா-காட்பாடி ரயில் பாதையை இரட்டிப்பாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.1,332 கோடி மதிப்பிலான இந்த திட்டம், இந்திய ரயில்வே இருப்பு பாதையின் மொத்த நீளத்தை மேலும் 113 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்துகிறது. மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான காட்பாடி டூ திருப்பதி வழியில் நெரிசலைக் குறைக்கவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், அதிக சேவை நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் விரிவாக்க திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.
புண்ணிய ஸ்தலங்களுக்கான இணைப்பு
பல முனை இணைப்புக்கான PM-Gati Shakti தேசிய மாஸ்டர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, பொதுமக்களின் எளிதான பயணத்திற்கு மட்டுமின்றி, பொருட்கள் மற்றும் சேவைகளின் தடையற்ற இயக்கத்தை எளிதாக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டமிடலை பிரதிபலிக்கிறது. மேம்படுத்தப்பட்ட ரயில் பாதை, திருப்பதி ஏழுமைலையான் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில் மற்றும் சந்திரகிரி கோட்டை உள்ளிட்ட புகழ்பெற்ற கலாச்சார மற்றும் மத தலங்களுடன் ஒரு முக்கியமான இணைப்பாக அமையும். இது இந்தியா முழுவதிலுமிருந்து யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
கல்வி & சுகாதார மையங்களுக்கான அணுகல்:
கலாச்சார முக்கியத்துவத்திற்கு அப்பால், இந்த ரயில் இருப்புப் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம் வேலூர் மற்றும் திருப்பதியில் உள்ள முக்கிய கல்வி மற்றும் சுகாதார மையங்களுக்கான அணுகலை மேம்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மற்றும் திருப்பதி மற்றும் தமிழ்நாட்டில் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 400 கிராமங்களில் சுமார் 14 லட்சம் குடியிருப்பாளர்களுக்கு இந்த திட்டம் நேரடியாகப் பயனளிக்கிறது. காட்பாடி முதல் திருப்பதி வரையில் ரயில் பயணத்திற்கான கட்டணம், குறைந்தபட்சம் 80 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.1,175 வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறையில் பங்களிப்பு:
15 ரயில் நிலையங்கள், 17 பெரிய பாலங்கள், 327 சிறிய பாலங்கள், ஏழு சாலை-மேற்புற பாலங்கள் (ROBs) மற்றும் 30 சாலை-கீழ்-பாலங்கள் (RUBs) ஆகியவற்றைக் கொண்ட இரட்டை ரயில் பாதை, ஆண்டுக்கு கூடுதலாக 4 மெட்ரிக் டன் சரக்குக்கான போக்குவரத்து திறனை அதிகரிக்கிறது. நிலக்கரி, விவசாய பொருட்கள், சிமென்ட் மற்றும் கனிமங்கள் போன்ற முக்கிய பொருட்களுக்கான போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தும், விலையுயர்ந்த போக்குவரத்தை நம்பியிருப்பதைக் குறைக்கும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு குறைப்பு:
காட்பாடி டூ திருப்பதி ரயில்வே மேம்பாட்டு திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளும் கணிசமாக உள்ளன. சாலை மார்க்கமான கணிசமான போக்குவரத்தை ரயில் பாதைக்கு மாற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் 4 கோடி லிட்டர் டீசலை மிச்சப்படுத்தவும், CO2 உமிழ்வை 20 கோடி கிலோகிராம் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது 1 கோடி மரங்களை நடுவதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் கார்பன் வெளியேற்றத்திற்கு சமம். இது இந்தியாவின் காலநிலை இலக்குகளை ஆதரிக்கிறது. மேலும், சாலைப் போக்குவரத்தை விட தளவாடச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.449 கோடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வணிகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது.