அரக்கோணம் அருகே காவலாளி மற்றும் சிசிடிவி படக்கருவி இல்லாத தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் சாவகாசமாக  கொள்ளையடித்த கொள்ளை கும்பலை  காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்துத் தீவிரமாக தேடி வருகின்றனர் . 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தணி-திருப்பதி சாலையில் அமைந்துள்ளது பெருங்களத்தூர் கிராமம். இங்கு செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த தனியார் கல்லூரியின் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டியவாறு இந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது .

 



 

இந்த ஏடிஎம் மையத்திற்குத் தனியாக காவலாளி மற்றும் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்படாத  நிலையில்  செக்யூர் வேல்யூ என்ற தனியார் நிறுவனம் இந்த ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவது  உள்ளிட்ட அணைத்துப் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்தது. இன்று காலை அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்ற பொதுமக்கள் சிலர் அந்த ஏடிஎம் மையத்தின்  இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்த தகவலை உடனடியாக அரக்கோணம் கிராமிய காவல் நிலைய  மற்றும் திருத்தணி  காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் சேதுபதி தலைமையிலான அரக்கோணம் மற்றும்  திருத்தணி காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் கொள்ளை நடைபெற்ற ஏடிஎம் மையத்தை ஆய்வு மேற்கொண்டு  விசாரணை நடத்தினர். காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் முன் பகுதியை வெல்டிங் இயந்திரம்  மூலம் துண்டித்து உட்பகுதியிலிருந்த கேஷ் பாக்சை உடைத்து பின்னர் அதிலிருந்த பணம் சுமார் 4 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

 



 

காவல் துறை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையின் படி இந்த ஏடிஎம் மையத்தைப் பராமரித்து வரும் செக்யூர் வேல்யூ என்ற தனியார் நிறுவனம்  கடந்த 15ஆம் தேதி  8.5 லட்சம் ரூபாய் பணத்தை வாடியையாளர்கள் பயன்பாட்டிற்காக இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பி இருந்ததும், கடந்த இரண்டு நாட்களில் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்குப் போக மீதமிருந்த 4 லட்சம் ரூபாயை தற்போது அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமிரா பொருத்தப்படாத நிலையில் சம்பவம் நடந்த பகுதியின் அருகே பொருத்தப்பட்டுள்ள  சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலைத் தேடி வருவதாக காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

 

இந்த கொள்ளை சம்பவம் அறிந்த அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார் மேலும் கொள்ளையர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இந்த துணிகர கொள்ளை  சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர்  திருவள்ளுவர் - ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

 



 

சம்பவம் குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் திருத்தணி-சென்னை செல்லும் பிரதான நெடுஞ்சாலையோரம் இந்த ஏடிஎம் மையம் அமைந்துள்ளது இங்கு 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதே போன்று நேற்று இரவு 10 மணிவரை ஏடிஎம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். நள்ளிரவில் தான்  கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. இந்த கொள்ளையில் சுமார் 4 பேர் வரை கூட்டாக ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்தார்.

 


 

திருத்தணி பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் தான் இங்கேயும் கைவரிசை காட்டியுள்ளது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப் பட்டுவருவதால் குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு சாவகாசமாக ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.