திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையாளர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் கொள்ளையடித்து சென்றனர்.


இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை சம்பவம் நடைபெற்ற 4 ஏடிஎம் மையங்களிலும் அலாரம் அடிக்கப்படவில்லை என்றும், இரவு காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்   மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.





 


கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்; 


திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் கூட்டுறவு துறை உள்பட 389 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் வங்கி மேலாளர்களும் ஏடிஎம் மைய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு பாதுகாப்பு சிலிண்டர் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும். ஒவ்வொரு ஏடிஎம் மையத்திலும் இரசு காவலர்களை கட்டாயமாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


நியமனம் செய்திடும் காவலர்களின் பணி வருகையினை வங்கி மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் ஏடிஎம் மையங்களில் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அபாய எச்சரிக்கை மணி ஆகியவற்றினை அவ்வபோது வங்கியாளர்கள் சோதனை செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் படி பாதுகாப்பு இல்லை என்று கருதப்படும் ஏடிஎம் மையங்களை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பூட்டி வைக்க வேண்டும் என்று பேசினார். 


 




கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில்,


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 4 ஏ டி எம் மைய கொள்ளை சம்பவத்தில் 3 ஏடிஎம் மையங்கள் ஒரே வங்கியை சார்ந்தது. ஆனால் கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி தரப்பில் காவல்துறையினருக்கு  எந்தவித ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை. காவல்துறையினர் முழுமையாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வங்கி தரப்பில் ஏடிஎம் மையங்களில் பணம் வைத்து பாதுகாக்க அவுட் சோர்சிங் முறை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பட்டு விட்டது என்றனர்.


கொள்ளை நடைபெற்ற ஏடிஎம் மையங்களில் அலாரம் செயல்படவில்லை. ஏடிஎம் மையத்தில் கண்காணிப்பு கேமராவின் காட்சி பதிவுகள் குறித்து கேட்டால் அது மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். பணம் கொள்ளை போன சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வங்கியினருக்கு எந்தவித பதற்றமும், அக்கறையும் இல்லை என்று வேதனையாக பேசினார்.


முன்னதாக எந்தந்த வங்கியில் எவ்வளவு ஏடிஎம் மையங்கள் செயல்படுகிறது. ஏ.டி.எம். மையங்களில் வங்கி மூலம் பணம் வைக்கப்படுகிறதா, அவுட் சோர்சிங் முறை மூலம் பணம் வைக்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தனர். மேலும் ஏடிஎம் மையங்களில் வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.