திருவள்ளூர் மாவட்டம் RK பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வீரமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30 ) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஜானகி (வயது 22 ) என்ற பெண்ணனை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து, இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். தற்பொழுது இரண்டாவது முறையாக கருவுற்ற ஜானகி , R K பேட்டை தாலுகாவில் உள்ள , அம்மையார்குப்பம் கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் , தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு வந்துள்ளார் .
நிறை மாத கர்ப்பிணியான ஜானகிக்கு , இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி அளவில் , பிரசவ வலி ஏற்பட்டுள்ளது , ஜானகியின் குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அனைத்து ஏற்ப்டுகளும் செய்துகொண்டிருந்த வேலையில் , ஜானகிக்கு பனிக்குடம் உடைந்து , பிரசவ வலி அதிகரித்துள்ளது. ஆம்புலன்ஸ் உதவி இல்லாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாது என்ற சூழ்நிலை உருவான நிலையில் . ஜானகியின் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொண்டுள்ளனர் . 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பட்டு அறையில் இருந்து அவர்களது போன் அழைப்பு , சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கிரிஜா (வயது 25 ) மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் பைலட் யோகநாதன் (வயது 37 ) ஆகியோருக்கு இணைக்கப்பட்டு , உடனடியாக அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சரியாக காலை 5 :40 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையம் அருகில் ( வீரமங்கலம் கிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சோளிங்கர் காவல் நிலையம் ) அம்புலன்ஸுடன் காத்திருந்த கிரிஜா மற்றும் யோகநாதன் அடுத்த 7 நிமிடங்ககளில் வீரமங்கலம் கிராமத்தை சென்றடைந்துள்ளனர். பின்னர் அடுத்த 5 நிமிடங்களில் ஜானகியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீரமங்கலம் கிராமத்தில் இருந்து சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிராதன சாலையை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் பொழுதே, ஜானகிக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்து , வலியை தாங்க முடியாமல் ஆம்புலன்சில் துடித்துள்ளார் ஜானகி .
இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் கிரிஜா , ஓடும் ஆம்புலன்சில் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார் , சரியாக காலை 5 : 56 மணி அளவில் , ஜானகிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஜானகிக்கு தேவையான அணைத்து மருத்துவ முதல் உதவியும் அம்புலன்சிலே செய்யப்பட்டு சரியாக 6 : 05 மணியளவில் ,தாயையும் சேயையும் பத்திரமாக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஜானகிக்கும் , பிறந்த குழந்தைக்கும் , அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு , பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது . ஓடும் ஆம்புலன்சில் , கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து , தாயையும் சேயையும் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவ உதவியாளர் கிரிஜா மற்றும் ஓட்டுநர் யோகநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
இது தொடர்பாக ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய , 108 அம்புலன்சின் மருத்துவ உதவியாளர் கிரிஜா ( வயது 25 ) , மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ள நான் , கடந்த 2017-ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் பணிபுரிவதற்க தேர்ந்தெடுக்கப்பட்டேன் . பிறகு இந்த பணியில் சேர்வதற்காக மாநில சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும் 2 மாத அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (எமெர்கெனசி மெடிக்கல் டெக்னீசியன் ) பயிற்சியை முடித்து , கடந்த நான்கு வருடங்களாக 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன் .
இந்த நான்கு வருடங்களில் , நூற்று கணக்கான விபத்துகள் , மற்றும் அசம்பாவிதங்கள் சிக்கி அவசர உதவி தேவைப்படும் பலதரப்பட்ட நோயாளிகளை காப்பாற்றி இருக்கிறேன் . அதேபோல் , இன்றுடன் சேர்த்து 4 கர்ப்பிணி பெண்களுக்கு ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்த்துள்ளேன். பிரசவம் என்பது மற்ற அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுபோல் இல்லை. இது இரண்டு உயிர்கள் சம்பந்தபட்ட விஷயம் . இதில் ஒரு உயிர் இனிமேல் தான் முதன்முதலில் இந்த உலகத்தை காணப் போகிறது . எனவே ஆம்புலன்சில் அழைத்து செல்லப்படும் அணைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எங்களைப்போல் உள்ள அணைத்து மருத்துவ உதவியாளரும் (அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ) தயங்காமல் அனைத்து பணிவிடைகளையும் செய்வோம். பிரசவத்தின் போது மிக முக்கியமானது மனதைரியம் , எனவே அவர்கள் மருத்துவமனை செல்லும் வரையில் அவர்கள் தைரியத்தை இழக்காதவாறு அவர்களுக்கு தேவையான மனவலிமையை கொடுத்து பார்த்து கொள்வோம். "தாயையும் , சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டோம் என்ற நிம்மதி தான் எங்களை இன்றளவும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது" என்று தெரிவித்தார் , மருத்துவ உதவியாளர் கிரிஜா .