வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தொரப்படி பகுதியில் வேலூர் மத்திய சிறைச்சாலை செய்யப்பட்டு வருகின்றது . இங்கு ஆண்களுக்கென ஆண்கள் மத்திய சிறை சாலையும் , பெண் கைதிகளுக்கென பெண்கள் மத்திய சிறை சாலையும் , சிறுவர்களுக்குக்கென பார்ஸ்டல் பள்ளியும் , தனி தனி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. தற்சமயம் ஆண்கள் மத்திய சிறையில்  742  தண்டனை மற்றும் விசாரணை கைதிகளும் , பெண்கள் தனிச்சிறையில் 97 தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். 




18  முதல் 21 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளை அடைக்கப்படும் பார்ஸ்டல் பள்ளி , ஆண்கள் மத்திய சிறை சாலைக்கு எதிரேயுள்ள தனி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது .


கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்பொழுது காவல் நிலையங்களில் இருந்து புதிதாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் கொண்டு வரப்படும் விசாரணைக் கைதிகள் நேரடியாக சிறையில் அடைக்க அனுமதியில்லை.  அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா நெகடிவ் என்ற  முடிவுக்குள் வந்த பின்னரே சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படுகின்றன . அதன்படி ஏறக்குறைய 10 நாட்கள் வரை காவல் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்படும் புதிய கைதிகளை வேலூர் பார்ஸ்டல் பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்க படுகின்றனர். இந்நிலையில் , நேற்று , வேலூர் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி ப்ரியதர்ஷினிக்கு , பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்படும் விசாரணை கைதிகளுக்கு ஏகபோகமாக கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பாதுகாப்பு பணியில் இருக்கும்  சிறை காவலர்கள் உதவியுடன் சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது . 




ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சிறை கண்காணிப்பாளர் ருக்மணி ப்ரியதர்ஷினியின்  பார்ஸ்டல் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும்படி , சிறை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் , அவரது  உத்தரவின் பேரில் , சிறை துறை அதிகாரிகள் , பார்ஸ்டல் பள்ளியில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர் . இந்த சோதனையின் பொழுது , விசாரணை கைதிகள் 3  பேர் அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் 50  கிராம் அளவுடைய கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது .


சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு , அறையில் இருந்த 3  கைதிகளும்  ஒத்துழைப்பு தராத நிலையில் , பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்களும் , தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தட்டி கழித்துள்ளனர். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிறை கண்காணிப்பாளர் ருக்மணி , அப்பொழுது பணியில் இருந்த சிறை தலைமை காவலர் இளையராஜா , முதல் நிலை காவலர் செல்வகுமார் மற்றும் சிறை வார்டன் அஜித் குமார் ஆகிய மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் . 


கடந்த ஜூலை  21 -ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் மத்திய சிறைகளில் ஆய்வு மேற்கொண்ட சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் சிறை துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த சூழ்நிலையில் , விசாரணை  கைதிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  அறையில் இருந்து கஞ்சா  பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டு , 3  சிறை துறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  சம்பவம் சிறை துறை அதிகாரிகள்  மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது .