திருவண்ணாமலை அடுத்துள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியில் புதியதாக ஆசிரம பூமி பூஜை போட்டிருக்கிறார் சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி
ஆன்மீக அட்வைஸ்களை அள்ளி வீசிவந்த அன்னபூரணி, சமீபத்தில் தானே தெய்வம் என்று சொல்லியும், லஷ்மி ராமகிருஷ்ணன் நடத்திய நிகழ்ச்சியின் மூலமும் எல்லோருக்கும் தெரியவந்தவர்
தமிழ்நாட்டில் அம்மா என்று சொன்னால் பலருக்கும் பலர் நினைவுக்கு வரலாம். ஆனால் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அம்மா என்று சொன்னால், "அன்னபூரணி அரசு அம்மா தான் நினைவுக்கு வருவார்" . அந்த அளவுக்கு அன்னபூரணியை சுற்றுகிறது சர்ச்சைகள்.
இணையதளம் முழுவதும் அன்னபூரணி அரசு அம்மா இப்பொழுது ஃபேமஸ். பேஸ்புக், ட்விட்டர் ,வாட்ஸ் அப் எந்த சமூக வலைதளங்களும் திறந்தாலும் அன்னபூரணி அரசு அம்மாவின் முகத்தை காணாமல் நம்மால் கடந்து செல்ல முடியாது. யார் இந்த அன்னபூரணி கடந்த 2014-ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் தனது இவர் பங்கு கொண்டார். இதில் அவர் அரசு என்ற நபருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிகழ்ச்சி முடிவில் தனது கணவரையும்,14 வயது பெண் குழந்தையும் பிரிந்து அரசு என்ற நபருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் அரசுடன் ஈரோடு பகுதியில் சென்று வசித்து வந்துள்ளார். அதன்பின்னர் மர்மமான முறையில் அரசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அன்னபூரணி தன்னுடைய காதலனான அரசு உருவ சிலையை வடித்து சிலகாலம் வழிபட்டு வந்துள்ளார் . இதனை தொடர்ந்து அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் என்ற தொண்டு நிறுவனத்தையும் அந்த பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன்னை "அன்னபூரணி அரசு அம்மாவாக" மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் அருள் உரை நிகழ்த்தி வந்தார்.
திருவண்ணாமலை பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் ரமணா ஆசிரமம், ஷேசாத்திரி ஆசிரமம் என ஆன்மீக ரீதியாக பல்வேறு ஆசிரமங்கள் உள்ள நிலையில், தற்போது திருவண்ணாமலை அடுத்த உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் செண்பகத்தோப்பு என்றபகுதியில் புதியதாக அன்னபூரணி 1 ஏக்கர் நிலம் வாங்கி அதில் புதியதாக அன்னபூரணி அரசு அம்மன் என்ற ஆசிரமம் கட்ட இன்று புதியதாக பூமி பூஜை துவங்கியுள்ளார்.
இதில் பல்வேறு இடங்களில் இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து அன்னபூரணி அம்மன் கால் வைக்கும் இடம் முழுவதும், பெண் பக்தர்கள் அவர் "கால் கீழே மலர்களைத் தூவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியும் "சரணம் சரணம் அம்மா, நீ வரணும் வரணும் அம்மா" , "சித்தரின் உருவங்களில் சித்துக்கள் செய்பவளே சரணம் " என்ற பாடலும் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து சில பெண்கள் அவருக்கு சூலம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்கள்.
மேலும் சில பெண்கள் அவரை வணங்கியபடி சாமி வந்தது போல் ஆடுகிறார்கள். ஆண் பக்தர்களும் அவரின் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்கிறார்கள்.