கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்தவர் யாரப் வயது (45) இவர் மெத்தை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சல்மா யாரப்புக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த குடிப்பழக்கத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் யாரப் மனைவியை பிரிந்து கடந்த சில மாதங்களாக ஓசூர் சானசந்திரம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் யாரப், அங்குள்ள கடவுள் நகர் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மாநாகராட்சி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.




 


யாரப்புடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் வயது (20) உடன் மது அருந்தியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் யாரப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் சந்தோஷை பிடித்து காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், யாரப்பை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனது அக்கா அஸ்வினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவாஸ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவாஸ்கான் எனது அக்காவை அடித்துக்கொலை செய்தார்.



 


தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்தநிலையில் கடந்த 1-ஆம் தேதி மாலை நானும், யாரப்பும் கடவுள் நகரில் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது மதுபோதையில் யாரப், உனது அக்கா அஸ்வினியை கொலை செய்ய நான்தான் அவாஸ்கானுக்கு திட்டம் தீட்டி கொடுத்தேன் என்று கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நான் அங்கு கிடந்த கம்பியால் யாரப்பை தாக்கினேன். மேலும் கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டு கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஆனால் காவல்துறையினர் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு சந்தோஷ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஓசூரில் தொழிலாளி, கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Petrol, Diesel Price : பயமுறுத்தும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?