வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான எஸ்சி சாதி சான்றிதழ் கொடுத்து மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி பெற்றுள்ளார். இது மாவட்ட விழிக்கண் குழு விசாரணையில் அம்பலமானது. அசல் சாதி சான்றிதழை திரும்ப பெற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் அணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளார்.


தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊராக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டமும் அடங்கும். இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக உள்ளார். 


இத்தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமூகத்தை (இந்து கவரை நாயுடு) சேர்ந்தவர் என்றும் தேர்தல் வேட்புமனுவில் போலியான ஆதிதிராவிடர் (எஸ்சி) சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. 


இது தொடர்பாக தோளப்பள்ளி ஊராட்சியில் அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துள்ள புகார் மனுவில், ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தங்கள் தோளப்பள்ளி ஊராட்சியில் மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா சுரேஷ் என்பவர் முறைகேடாக போலியான ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது. 


மேலும் மாவட்ட அளவிலான விழிக்கண் குழு விசாரணையில் குறிப்பிட்டவை. 


வேலூர் மாவட்டம்  அணைக்கட்டு வட்டம் தோளப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த திரு.பாக்கியராஜ் த / பெ கண்ணன் என்பவர் அணைக்கட்டு வட்டம் தோனப்பள்ளி கிராம ஊராட்சி 2021 உள்ளாட்சி தேர்தலில் திருமதி.கல்பனா க / பெ திரு . சுரேஷ் என்பவர் போலியான SC ( ஆதிதிராவிடர் ) சாதி சான்றிதழ் சமர்ப்பித்து போட்டியிட்டது குறித்து புகார் மணு வரப்பெற்றதின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான விழிக்கண் குழுவின் ( District Level Vigllance committee ) விசாரணை கோரி அறிக்கை வரப்பெற்றது . அதிலௌ கல்பனா கரேஷ் இந்து - கவரைநாயுடு இனத்தை சார்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் திருமதி.கல்பனா சுரேஷ் என்பவரின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டு வட்டம் என்பதால் பேர்ணாம்பட்டு வட்டாட்சியரின் கடிதத்தில் பத்தலபல்லி கிராம நிர்வாக அலுவலர் , சின்னதாமல் செருவு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேர்ணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் ஆகியோர் திருமதி கல்பனா சுரேஷ் என்பவரின் உறவினரான பெரியதாமல் செருவு எனும் கிராமத்தில் வசிக்கும் சம்பூர்ணம் ( கல்பனாவின் பெரியம்மா ) , மசிகம் கிராமத்தில் வசிக்கும இந்திராணி  (தகல்பனாவின் உறவினர்) மற்றும் மேட்டுக்குடிகள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் கல்பனா சுரேஷ் என்பவர் இந்து - கவரைநாயுடு இனத்தை சார்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .


 இதனையடுத்து கல்பனா சுரேஷ் என்பவருக்கு தனது சாதி பழக்க வழக்கங்கள் குறித்து விளக்கம் கொடுக்க வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் குழு முன்பு 28.01.2022 அன்று நேரில் ஆஜராகும் படி அழைப்பாணை அனுப்பப்பட்டது . அதன்படி கல்பனா சுரேஷ் என்பவரின் சாதிச்சான்று மீது மெய்த்தன்மை அறிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் குழு முன்பாக கல்பனா சுரேஷ் என்பவர் 28.01.2022 அன்று மாவட்ட விழிக்கண்குழு முன்பாக ஆஜராகி அவர் அளித்த விளக்கம் சாதி , பழக்க வழக்கங்கள் மரபு வழிச்சார்ந்த முறைகளுக்கு இசைந்தாய் இல்லை என மாவட்ட விழிக்கண் குழு கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான ( District Level Vigilance committee ) மாவட்ட அளவிலான விழிக்கண் குழுவின் செயல்முறைகளில் கல்பனா சுரேஷ் என்பவர் பெற்ற ஆதிதிராவிடர் ( SC ) சாதிச்சான்று நாள் 03.07.2021 உண்மைக்கு புறம்பானது எனவும், கல்பனா சுரேஷ் இந்து ஆதிதிராவிடர் ( SC ) இனத்தை சார்ந்தவர் இல்லை எனவும் மாவட்ட விழிக்கண் குழுவில் முடிவு செய்யப்பட்டது . நாள் .28.09.2004  அதன்படி கல்பனா க / பெ திரு.சுரேஷ் என்பவருக்கு அணைக்கட்டு வட்டாட்சியரால் 1 வழங்கப்பட்ட ( SC ) ஆதிதிராவிடர் சாதிச்சான்று நாள் . 03.07.2021 மற்றும் குடியாத்தம் வட்டாட்சியரால் வழங்கப்பட்ட ( SC ) ஆதிதிராவிடர் சாதிச்சான்று வேலூர் மாவட்ட விழிக்கண் குழுவின் செயல்முறைகளின்படி கல்பனா சுரேஷ் என்பவருக்கு வழங்கப்பட்ட இந்து - ஆதிதிராவிடர் ( SC ) சான்றிதழினை மாவட்ட அளவிலான விழிக்கண் குழுவின் மூலமாக இரத்து செய்ய ஏதுவாக தனியருக்கு வழங்கப்பட்ட அசல் சாதிச்சான்று பெற்று உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, தோளப்பள்ளி ஊராட்சியில் தற்போது தலைவராக உள்ள கல்பான சுரேஷ் முறைகேடாக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றது நிருபனம் ஆகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட விழிக்கண் குழு தலைவர் என்ற முறையில், கல்பனா மீது நடவடிக்கை எடுக்க கோரும் இது தொடர்பான கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப உள்ளார். இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என கூறினார். 


இதோடு மட்டும் இல்லாமல் முறைகேடாக சாதி சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.