சித்ரா பவுர்ணமியையொட்டி ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ரோஜா  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் ஆலயம், அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமலையம்மன் ஆகியோரை தரிசனம் செய்த அவருக்கு திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா;


கடந்த இரண்டரை ஆண்டுகளாக அண்ணாமலையாரை பார்க்காமல் இருந்தது தனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. தற்போது அண்ணாமலையாரை தரிசனம் செய்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த தான் கிரிவலம் வந்ததற்குப் பிறகுதான் தன்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போனது என்றார்.


தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை வளரவிடாமல் இரண்டு முறை அக்கட்சியினரே தோற்கடித்ததை சுட்டிக் காட்டியவர் மூன்றாவது முறை தான் இங்கே வந்து கிரிவலம்  மேற்கொண்டதை அடுத்து வெற்றி பெற்றதாகவும், தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை சகோதரியாக ஏற்ற ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தனக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதாகவும் கூறினார்‌.


 




 


மேலும், அவர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தற்பொழுது அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டதாக தெரிவித்த அவர், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஆந்திர மாநில மக்கள் எவ்வாறு சந்தோஷப்பட்டார்களோ அதேபோல தமிழக மக்களும் தற்போது மிகுந்த சந்தோஷம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மிகவும் அருமையாக உள்ளதாகவும் திமுக தலைவரை எதிர்பார்த்தது வேறு என்றும் ஆனால் அவர் மிகவும் கண்ணியமாகவும் மென்மையாகவும் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் மக்கள் கேட்டவுடன் மின்னல் வேகத்தில் அனைத்து பணிகளையும் செய்வது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார். 


 




 


தமிழக முதல்வரும் ஆந்திர முதல்வர்களும் நண்பர்களாக உள்ளார்கள். ஆந்திர தமிழக எல்லையில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இரு மாநில முதல்வர்களும் செய்து வருகிறார்கள். இந்தியை எவராலும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. ஆனால் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தாய் மொழியுடன் இணைந்து ஆங்கிலமும் இந்தியும் கட்டாயம் தேவை. அவ்வாறு மாணவர்கள் அனைத்து மொழிகளையும் பயின்றால் தான் நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைய முடியும். ஆங்கிலமும் இந்தியும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து முடித்த பின் வெளியே வந்த அவர், கட்டாயம் இந்தி தேவை என்றும் மத்தியில் உள்ள மத்திய அமைச்சர்கள் பலருக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றும் நமது மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை கேட்டு பெற இந்தி கட்டாயம் வேண்டும் என்றும் பேசிக்கொண்டே வெளியே சென்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண