தன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை, நானே தான் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு சென்றேன் என நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் பரப்புரைகளும் தொடங்கி விட்ட நிலையில் மக்களை கவர்வதற்காக பல்வேறு செயல்களில் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். 


இதற்காக கடந்த சில நாட்களாகவே அவர் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “இங்க தேர்தலில் 20, 40, 70, 129 வருஷமா ஆண்ட பரம்பரை எல்லாம் நிற்கிறார்கள். இங்க எல்லா பிரச்சினையும் அப்படியே இருந்துட்டு இருக்குது. வாழ்வாதாரம், வேலை வாய்ப்பை உயர்த்த வேண்டும். வேலூரை சுற்றி மலைகள் இருக்கு. இதனை கொடைக்கானல் மாதிரி பசுமையாக மாற்ற வேண்டும். பாலாற்றில் தண்ணீர் வர வேண்டும். அப்படி வரும் நிலையில் மண் அள்ள முடியாது. மதுபான நிறுவனங்களை எல்லாம் உடைக்க வேண்டும். ஒற்றை ஆளா நான் எப்படி செய்வேன் என நினைத்தால் அது முடியாது தான்.


ஆனால் ஒற்றை ஆளாக இருந்தால் தான் பண்ண முடியும். கூட்டணியில் போய் விட்டால் வாயை மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டும். மார்ச் 30 ஆம் தேதிக்கு மேல் நான் என்னுடைய கொடுவாள், அரிவாளை தூக்குவேன். ஒரு தமிழரை பிரதமராக அமரவைக்க வேண்டும். ஒரு தமிழர் இந்தியாவை ஆள வேண்டும். தமிழர்கள் உரிமைகள் ரொம்ப பாதிக்கப்படுகிறது. மீனவர்கள், நீட் பிரச்சினை என எல்லாம் அப்படியெல்லாம் இருந்துக் கொண்டே இருக்கிறது. 


பிரதமர் மோடி ஒரு அடிப்படை மதவாதி. அவர் விரட்டப்பட வேண்டும். நான் எந்த அடிப்படை மதவாதத்தையும் வெறுக்கிறவன். பிரதமர் மோடி தான் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறாரே, எதை திறந்தாலும் லட்சக்கணக்கில் விளம்பரம் செய்கிறார். மக்கள் பணம் இருக்கப்போய் தான் இவ்வளவு விளம்பரம். மற்ற தொகுதிகளில் எந்த கட்சியை சேர்ந்த யாரோ வரட்டும். இந்த ஒரு தொகுதியில் தான் நான் நிற்கிறேன். ஏனென்றால் எனக்கு வேறு வழியில்லை. மக்களை விட்டால் வேறு வழியில்லை. நான் உங்களுக்கு வேலைக்காரனாக உழைப்பேன். அவன் அவன் இடத்துல இருந்துகோங்க. ‘இந்தியா எங்கள் தாய்நாடு..இஸ்லாம் எங்கள் வழிபாடு’ என்பதே எங்களின் கொள்கை. 


பிரதமர் மோடிக்கு போட்டி போட்டு என்னால் நடிக்க முடியவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓட்டு போடுங்க. நான் நாடாளுமன்றம் போவேன். எங்கேயும் ஓடி விட மாட்டேன். என்னை யாரும் கூட்டணிக்கு கூப்பிடவில்லை. நானே தான் போனேன். நானே தனியா நின்னுக்குறேன். ஏனென்றால் பயம். என்னை பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க. நான் ஒருத்தன் வந்தால் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு சென்று விடுவான் என பயப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.