குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக வடமாவட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று வரை பெய்து வந்தது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அடுத்த மிஷன் தெரு பகுதியை  சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி ஞானம்மாள்.

 



 

இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக, ஞானம்மாள் தங்கியுள்ள வீட்டின் பக்கவாட்டு சுவர் பலவீனமடைந்து உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டில் ஞானம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மழை காரணமாக பலவீனம் அடைந்திருந்த சுற்றுச் சுவர் திடீரென்று இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. சுவர் விழுந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது ஞாம்மாளின் வீட்டுச் சுவர் விழுந்துள்ளது தெரியவந்தது.

 

இதனையடுத்து இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த மூதாட்டியை மீட்ட பொதுமக்கள் ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஞானம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மூதாட்டி உயிரிழப்பு குறித்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு இடிந்துகிடந்த வீட்டை ஆய்வு செய்தார். மேலும் இவ்விபத்து தொடர்பாக ரத்தினகிரி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூதாட்டிக்கு ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். 



 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகப் பாலாற்றில் 16 ஆயிரம் கன அடி வெள்ளமும், பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி வெள்ளமும் வந்துகொண்டுள்ளது.  இதன் காரணமாக பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 144 கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதி அளவும், 24 வீடுகள் முழுவதுமாகவும் சேதம் அடைந்துள்ளது.