திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு, கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 8 பேரை கைதுசெய்து அவர்களிடமிருந்து 11  சவரன் தங்கநகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்


அம்பலூர் பகுதியைச் சேர்ந்த மாமலைவாசன் மற்றும் இராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளையில் நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது



இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்தி,  வாணியம்பாடி டி.எஸ்.பி பழனி செல்வம் மற்றும் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் 7 காவலர்களை கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு  குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்  .


இந்நிலையில் இன்று  வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக  2 இருசக்கர வாகனங்களில்  வந்த 4 நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர்.




இதனால் அவர்கள் மேல் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது அம்பலூர் மற்றும் இராமநாயக்கன் பேட்டையில் வீடுகளில்  மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.


அவர்களிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் கார்த்திகேயன் (28), சிக்கனாங்குப்பம் அபினேஷ் (19), காமேஷ் (19) வினோத் குமார் (19), சக்திவேல் (24) , பசுபதி (24), முரளி (26) லோகு (19) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 11 சவரன் தங்க நகை 2 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர் .


மேலும் இந்த தொடர் கொள்ளை குறித்து முக்கிய குற்றவாளியான கார்த்திகேயன் கூறுகையில் , சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நானும் எனது நண்பர்களும், கிராமப்புற பகுதிகளில் இருக்கும் பூட்டிய வீடுகளை நோட்டமிடுவோம். பிறகு அந்த வீட்டில் உள்ளவர்கள் அன்று இரவு கண்டிப்பாக வரமாட்டார்கள் என்று உறுதி செய்த பின்னர், எனது கூட்டாளிகளுடைய உதவியோடு நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவோம். பிறகு சென்னை, பெங்களூரு, ஆந்திர போன்ற பகுதிகளில் சில நாட்கள் தலைமறைவாகிவிட்டு மீண்டும் கிராமப்புற பகுதிகளில்  பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்போம் என்றார்.



 


நகர்ப் புறங்களில் கொள்ளை அடித்தால் எளிதில் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தால் தொடர்ந்து கிராமபுறங்களை மையமாக கொண்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது


 கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 457 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .  திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி எண் ஆன 94429 92526-க்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.