வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இந்த கடையில், 2021-டிசம்பர் மாதம் 14-ம் தேதி அன்று கடையின் பின்புறம் சுவரைத் துளையிட்டுக் நள்ளிரவு புகுந்து மர்ம நபர் ஒருவர் நகைகளைத் திருடிச் சென்றார். இது தொடர்பாக அடுத்த நாள் 15-ம் தேதி காலையில் கிடைத்த தகவலின் பேரில் அப்போதைய வேலூர் சரக டிஐஜியாக இருந்த ஏ.ஜி.பாபு, அப்போதைய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கடையினுள் புகுந்த ஒல்லியான தேகத்துடன் இருக்கும் நபர் ஒருவர் சிங்கத்தின் முகமூடியை அணிந்துகொண்டு அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் ஸ்ப்ரே அடித்துவிட்டு ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த நகைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றார்.


 




நகை திருட்டு 


கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் 819. கிராம் எடையுள்ள வைர மோதிரங்கள், 53.கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ்கள், 100 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இந்த வழக்கில் 8 தனிப்படைகள் அமைத்து விசாரித்த காவல் துறை, மேலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேஜிஎப் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் தனிப்படையினர் சென்றனர். இதற்கிடையில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் (23) என்பவனை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நகைகளை அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றங்கரை மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.




 


3 ஆண்டுகள் சிறை தண்டனை 


இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைப் பத்திரமாக மீட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் ஒப்படைத்தனர். பின்னர் நகை திருடிய டீக்காராமனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு ஜே.எம். 4 நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்போடு டீக்காராமனை போலீசார் அழைத்து ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு ஜே.எம்.4 நீதிபதி ரோஸ் கலா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் 1 மணி நேரம் டீக்கராமனிடம் விசாரணை நடந்தது விசாரணையின் போது, டீக்கராமன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் டீக்காராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரோஸ் கலா தீர்ப்பு அளித்தார்.