(Thiruvannamalai Annamalaiyar Temple): சிவபெருமானுக்கு பல ஊர்களில் பல பெயர்களில் பல திருத்தலங்கள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்த பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்கு அதாவது அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை ஆகும். அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கினால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.


நாளை பெளர்ணமி: அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் அண்ணாமலையார் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்வதும், வணங்கி செல்லும் பக்தர்கள் ஈசனை நினைத்து கிரிவலம் செல்வதும் வழக்கம் ஆகும். ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளை வருகிறது. பெளர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் நாளை பக்தர்கள் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு என்பது நம்பிக்கை ஆகும். வழக்கமாக பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.


 


 




 


கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம்:


முழு நிலவு பிரகாசமாக ஒளிக்கும் பௌர்ணமி தினமான நாளை ஓம் நமச்சிவாய எனும் நாமத்தை சொல்லிக்கொண்டே கிரிவலம் வர வேண்டும். கிரிவலம் வருவதற்கு நாளை இரவு 10.58 மணி முதல் மறுநாள் (அதாவது 31-ந் தேதி) காலை 7.05 மணி வரை உகந்த நேரம் ஆகும். இதனால், பக்தர்கள் நாளை பெளர்ணமியில் கிரிவலம் செல்வது உகந்தது என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெளர்ணமி என்பதாலும், பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதாலும் திருவண்ணாமலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் செல்ல பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


 


 




பௌர்ணமி சிறப்பு ரயில்கள்:


அதன்படி ஆவணி மாத பௌர்ணமியானது, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வருகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பௌா்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் ( வண்டி எண்.06033) வரும் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன்மெண்ட் வழித்தடம் வழியாக அடுத்தநாள் நள்ளிரவு 12:15 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். இதேபோல மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06034) வேலூர் கண்டோன்மெண் வழித்தடம் வழியாக அதே நாள் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.