பிறப்பில் உயர்ந்தது பெண் பிறப்பு என்றும் , பெண் பருவத்தில்  உயர்ந்தது தாய்மை பருவம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த  உயரிய தாய்மை பருவத்தில், ஒரு தாய்க்குச் சுரக்கும் தாய்ப்பாலுக்கு ஈடு இணையே இல்லை என்று கூறலாம். இத்தகைய  சிறப்பு மிக்க தாய்ப்பாலைக் கொண்டு  கலைப்பொருட்களை வடிவமைத்து அதை என்றும் நினைவில் நீங்காத  ஒரு நினைவுச் சின்னமாக உயிர்கொடுத்து வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர்.

 



 

பி ஏ , ஆங்கிலம் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள தாரிக்கா சல்மான் (வயது 22  ) தாய்மை மற்றும் தாய்ப்பால் மீது தனக்கிருந்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவே , முதலில் தாய்ப்பால் சம்பந்தமான புத்தகங்களை ஆன்லைனில் படித்ததாகவும் , பின்னர் அந்த பாடப்பிரிவில் ஏற்பட்ட ஆர்வத்தால்
   பாலூட்டுதல் மேலாண்மை ஆலோசனை (lactation management  counselling), குழந்தை மற்றும் இளம் குழந்தைக்கு பாலூட்டுதல் (infant  and   young child feeding ), உள்ளிட்ட 2 1/2 வருட டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளார் . தற்பொழுது தனது கணவருடன் ராணிப்பேட்டை பகுதியில் வசித்துவரும் தாரிக்காவிடம் அவர் படைத்துவரும் கலைப்பொருட்கள் சம்பந்தமாக ABP நாடு செய்தி குழுமம் தொடர்புகொண்டு  பேசியது .

 



 

அப்பொழுது தாரிக்கா, " நான் எனது இளங்கலை பட்டத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் போதே , ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜா பகுதியை அடுத்த  , கீழ்புதுப்பேட்டயை சேர்ந்த  சல்மான் (வயது 27 ) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர் பி எல் முடித்திவிட்டு சீமானின், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராகப் பதவிவகித்து வருகிறார் . எங்களுக்கு அப்பான் என்ற 2 வயது மகனும் உள்ளார். தாய்ப்பால் மூலம் கலைப்பொருட்கள் செய்யும் ஆர்வம்  எவ்வாறு வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த தாரிக்கா "தாய்மை மற்றும் தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் , தாய்க்கும் இடையேயான ஒரு பாசப் பிணைப்பு . இந்த புனிதமான பந்தம் ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து அதிகப்படியாக 5 வருடத்திற்குள் நிறைவடையக்கூடிய  ஒரு குறுகிய கால பிணைப்பு. ஒரு குழந்தை வளர்ந்தவுடன் அந்த தாய்ப்பாலின் மகிமையையும், புனிதத்தையும் மறந்து விடுகிறார்கள் .

 



 

மேலும் நான் பாலூட்டுதல் மேலாண்மை என்ற கோர்ஸ்  படித்துக் கொண்டிருக்கும் போதே என் மகன் பிறந்ததால், என்னுடைய இந்த புனிதமான தாய்மை பருவத்தை , நானும் எனது மகனும்  நினைவு கூறும் வகையில் , முதன் முதலில் என் தாய்ப்பாலை சில ரசாயனப் பொருட்களுடன் கலந்து என் மகனுக்கு கழுத்தில் அணியக்கூடிய ஒரு டாலரை உருவாக்கினேன். பிறகு எனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்காக  அவர்கள் விரும்பிய கலை பொருட்களைச் செய்து கொடுத்தேன் .

 

தற்போது இது மிகவும் வரவேற்புப்பெற்று, விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் தொடங்கி , இந்தியா  , மலேசியா , சிங்கப்பூர் , இத்தாலி , கனடா , அமெரிக்கா என பல உலக நாடுகள் முழுவதும் , நான் செய்யும் இந்த மாறுபட்ட கலைப்பொருட்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது .

 



 

 தாய்ப்பால் மட்டும் இல்லாமல் , குழந்தைகளின் , முதல் பல் , விரல் நகம் , தொப்புள் கொடி என அனைத்திலும் கலைப் பொருட்களைச் செய்து கொடுத்து வருகிறேன் மேலும் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்த குடும்ப உறுப்பினரின் முகத்தினை கூட காணமுடியாமல் மீளா  துயரில் வாடும்  அவரது குடும்பத்தாருக்கு , இறந்தவர்கள் பயன்படுத்திய , துணி, அவர்கள் பயன்படுத்திய சீப்பில் இருக்கும் ரோமங்களைக் கொண்டும் அவர்களது குடும்பத்தாருக்குக் கலைப்பொருட்கள் உருவாக்கித் தருகிறேன் . அவர்களை இழந்து  வாடும் குடும்பத்தாருக்கு இந்த கலைப்பொருட்கள் பெரும் ஆதரவாகவும் , மகிழ்ச்சியும்  அளிக்கின்றது  என்று தெரிவித்தார் .

 



 

மேலும் இதுபோன்ற கலைப்பொருட்களைச் செய்துகொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் , தாரிக்காவின் அலைப்பேசியில் நேரடியாகத் தொடர்புகொள்ள அவரது அலைப்பேசி என்னையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் .

 

தாரிக்கா சல்மான் - 93844 22261 .