தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் திமுக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குறைகூறுகிறார் துரைமுருகன் வேலூரில் பேட்டி :
வேலூரில் உள்ள அண்ணாசாலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக பொதுச் செயலாளரும் தமிழ் நாடு நீர்ப் பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார் .
பிறகு அலுவலகத்தின் ஒரு பகுதியில் 'கலைஞர் பதிப்பகம்' என்ற பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்களைக் கொண்டுள்ள நூலகத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .
இந்த நூலகமானது சட்டமன்ற அலுவலகத்திற்கு வருகை தரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் , படித்து பயன்பெறும்வகையில் , திராவிட கட்சித் தலைவர்கள் வரலாறு மற்றும் , பொதுவுடைமை கருத்துக்கள் உள்ளடங்கிய பல புத்தகங்களைச் சட்டமன்ற அலுவலகத்திற்கு வருகைதரும் பொதுமக்கள் வாசித்து பயன்பெறும்வகையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் அதிமுகவினர் மீது திமுக பொய் வழக்குப்போடுவதாகவும் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார்களே என்று கேட்ட போது அதை பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது எனக் கூறியதுடன் திமுக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே எனக் கேட்ட போது அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார்கள் அதனால் எங்களைத் தோல்வியடைந்ததாகக் கூறுகிறார்கள் என்று கூறினார். மேலும் அவர் திமுக அரசு சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறது தோல்வி என்பது ஏதும் இல்லை" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
புகையும் உள்கட்சிப்பூசல் .
வேலூர் மேயர் பதவியைப் பெறுவதில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் விஜய்யின் தரப்புக்கும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் தரப்புக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது..
இந்நிலையில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் , அணைக்கட்டு MLA மற்றும் வேலூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஏ பி நந்தகுமார் தலைமையில் கலைஞர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது .
இதில் மேயர் பதவி சம்மந்தமாக நடந்த வாக்குவாதத்தில் காட்பாடி தொகுதியின் பொறுப்பாளர் V.S.விஜய்யின் ஆதரவாளரான முன்னாள் திமுக கவுன்சிலர் ராமலிங்கத்திற்கும் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கத்தைச் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் , மாவட்டச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் நடந்து 2 வாரத்திற்குள் , கார்த்திகேயன் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் . V S விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டது .
எனினும் அமைச்சர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் . பெயரளவிற்குக் கலந்து கொண்ட விஜய் . கார்த்திகேயன் தரப்பினரிடம் பட்டும் படாதவரே நடந்துகொண்டார் . மேலும் அலுவலக திறப்பு விழா முடிந்ததும் , அமைச்சரைத் தொடர்ந்து விஜய்யும் அங்கு இருந்து கிளம்பிவிட்டார் .