திருவண்ணாமலை மாவட்டம், சொரக்கொளத்தூர் கிராமத்தில் உள்ள பழைமையான அபீதகுஜாம்பாள் சமேத அம்பளவானர் கோயிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த 2 சிற்பங்களும், காடவராயர் காலத்து கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை 1200 ஆண்டுகள் பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

  


இக்கல்வெட்டுகள் குறித்து திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் குழுவைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசும்பொது, 


திருவண்ணாமலை அடுத்த சொரக்கொளத்தூர் பகுதியில், ஏற்கெனவே ஆவணம் செய்யப்பட்டிருந்த மூன்றாம் நந்திவர்மனின் நடுகல்லை பார்ப்பதற்காக குழுவுடன்  சென்றோம். அப்போது அங்கிருந்த மக்கள் பல்லவர் காலத்தை சேர்ந்த பழமையான சிவன்கோயிலை பற்றி சொன்னார்கள்




ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் காலத்தால் சிதைந்து விட்டதால் அதனை புனரமைக்க கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் பல காரணங்களால் தடைப்பட்டு பாதியில் நிற்கிறது.  இக்கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பல்லவர் காலத்திய ஸ்ரீவட்சம் மற்றும் சண்டேஸ்வரர் சிற்பம் கண்டறியப்பட்டது. 3 அடி உயரமும்  2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் ஸ்ரீவட்சம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அறியச் சிற்பமான இது சங்க காலம் தொட்டு பல்லவர்கள் காலம் வரை திருமகளைக் சிற்பங்களில் சின்னமாக குறிக்கும் வழக்கம் உண்டு. இங்குள்ள ஸ்ரீவட்சம் சிற்பத்தில் வளமையின் தெய்வமாகக் குறிக்கப்படும் திருமகளுக்கு உண்டான தாமரை மலர்கள் இரண்டு பக்கமும் காட்டப்பட்டுள்ளது. திருமகளைத் தனது மார்பில் தாங்கி இருப்பதைக் குறிப்பதற்காகத் திருமால் மார்பில் ஸ்ரீவட்சம் சின்னம் சிறிய வடிவில் பொறிக்கப்படும் வழக்கமும் இன்று வரையில் சிற்பக்கலையில் உள்ளது.



அருகிலே இதுபோன்று 3 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய பலகை கல்லில் வலது கையில் மழுவேந்தியும் இடது கையை தனது தொடையில் ஊன்றியும் ஒரு காலை மடித்து இருக்கையில் அமர்த்தி மறுகாலைக் கீழிறக்கிய நிலையில் பாதங்களை பக்கவாட்டில் வைத்து சுகாசனத்தில் புடைப்பு சிற்பமாக சண்டேஸ்வர நாயனார் சிற்பம் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும் காதுகளில் பனையோல குண்டலமும் கழுத்தில் சரப்பளியும் அணிந்துள்ள இச்சிற்பத்தின் முகம் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.


இவ்விரு சிற்பங்களின் காலமும் 8ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவர்களின் காலமாகும். இவ்விரு பல்லவ சிற்பங்களைத் தவிர்த்து இக்கோவிலில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த லிங்கம், அம்மன், சண்முகர் மற்றும் பைரவர் சிலைகளும் காணக்கிடைக்கிறது.


மேலும் இக்கோயில் வடக்குப்புற குமுத பட்டையில் காணப்படும் கல்வெட்டு ஸ்வஸ்தஸ்ரீ சகல புவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்குவதால் இக்கல்வெட்டு பிற்கால பல்லவ மன்னரான காடவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (கி.பி 1216-1242) கல்வெட்டு என்று அறியமுடிகிறது. இது அம்மன்னனின் மூன்றாம் ஆட்சியாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி 1219 ம் ஆண்டாகும்.


 




அதாவது கி.பி 1219 ஆம் ஆண்டு சோழ பேரரசின் கீழ் இன்றைய தர்மபுரி பகுதியை ஆட்சிபுரிந்த வந்த சிற்றரசனான ராஜராஜ அதியமானின் மகனான விடுகாதழகிய பெருமாள் என்ற மன்னன் இக் கோயிலைக் கற்றளியாக (கருங்கற்களால் ஆன கோயில்) செய்து இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 


விடுகாதழகிய பெருமாள் என்ற மன்னன் சோழ பேரரசின் வலிமைமிக்க மன்னனான மூன்றாம் குலோத்துங்கன் கீழ் ஆட்சி செய்துவந்தான். அதியர் வம்சத்தினரான இவர்கள் சேரர்களின் கிளை மரபினர் என்பதை மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.


மூன்றாம் குலோத்துங்கன் மறைவுக்குப் பின்னர் போசாளர்களிடம் இவன் ஆண்ட பகுதி வீழ்ச்சி அடைந்து போனதால் அதியர் மரபில் ஆண்ட கடைசி மன்னனும் இவரே ஆவார் . அதே போல் இக்கோவிலின் மூலவராக உள்ள சிவபெருமானை "அம்பல கூத்த நாயனார்" என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளதை நம்மால் அறியமுடிகிறது. 


 




 


இதைத் தவிர்த்து இவ்வூரில் உள்ள ஏரியில் மூன்றடி உயரப் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாகக் கிராமிய கலை பாணியில் இரண்டு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி எருமை மீது நின்ற கோலத்தில் விஷ்ணு துர்க்கை சிற்பமும் அதன் அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய கல்வெட்டு ஒன்றும் காணக்கிடைக்கிறது. இதனை ஊர் மக்கள் பாலாத்தம்மன் என்ற பெயரில் வணங்குகின்றனர் 


புதிதாகக் கண்டறியப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் 'சுறைகுளத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரே நாளடைவில் மருவி, சொரக்கொளத்தூர் என்று வழக்கில் உள்ளது" என கூறினார்.