திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம், உதயராஜா மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இணைந்து வெறையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொழுது வெறையூரை அடுத்த ஆங்குனம் கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் பலகை சிற்பம் ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த கோபிநாத் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
இது குறித்து மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசுகையில்;
எங்கள் அமைப்பு சார்பில் வாரத்தில் ஒரு முறை அல்லது மாததில் இருமுறை என பொதுமக்களுக்கு முந்தைய காலத்தில் நம்முன்னோற்கள் எப்படி வாழ்ந்தார்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை பற்றியும், கோயில்களின் சிற்ப கல்வெட்டுகளின் மூலம் தெரிய படுத்தி உள்ளனர். அந்த கல்வெட்டுகள் நாளடைவில் மறைந்து கொண்டிருக்கின்றது. அதனை நாங்கள் கண்டு பிடித்து அதில் உள்ளதை பொதுமக்களிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் கூறுவோம்.
அந்த வகையில் எங்களுக்கு ஒரு புதிய கல்வெட்டு போன்ற சிற்பம் உள்ளதாக என்னுடைய நண்பன் கூறினார். அப்போது நான் மற்றும் என்னுடைய நண்பர்கள், காலையில் சென்றோம் தற்போது மார்கழி மாதம் என்பதால் பனிமூட்டம் இருந்தது. அதனைக்கூட பொருட்படுத்தாமல் எங்களுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தோம் ஒருகட்டத்தில் எங்களால் குளிரை தாங்க முடியவில்லை வெறையூர் வந்தவுடன் சூடான தேநீர் அருந்திவிட்டு அதன்பின்னர் எங்களுடைய நண்பர் கூறிய இடத்திற்கு சென்று அடைந்தோம். அந்த இடம் ஆங்குளம் - பன்னியூர் சாலையில் ஒரு வீட்டின் பின்புறம் வெட்டவெளியில் பவகை கல்லினால் ஆன சிற்பம் காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட சதுரமான பலகை கல்லின் மேற்புறம் அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டு இருந்தது. அதனுள் 8 கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது.
அழகான கரண்ட மகுடம் ,தலையை அலங்கரிக்க வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும், இரு செவிகளிலும் நீண்டு உருளையான கண்களுடன் காட்சி தருகிறார். கழுத்தில் ஆரம் போன்ற சவடியும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான காசு மாலை அணிந்து காட்சியளிக்கிறார். 8 கரங்களில் தனது மேல் வலது கரத்தில் சங்கும் ஏனைய வலது கரங்களில் முறையே வாள் அம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் இடையின் மீது ஊறு முத்திரையிலும் மேல் இடது கரத்தில் சக்கரமும் ஏனைய கைகள் முறையே வில் கேடயம் எந்திய நிலையில் கீழ் இடது கரம் தனது இடை ஆடையைச் சுருட்டி பிடித்தவாரு காட்டப்பட்டுள்ளது.
கொற்றவையின் இருபுறமும் இருவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஒரு வீரர் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மற்றொருவர் நவகண்டம் தரும் வகையிலும் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. இக்கொற்றவை சிற்பத்தின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இது பல்லவர் கலைபாணி என்றும், இதன் காலம் எட்டாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மேலும் இவ்வூரின் கிழக்கே உள்ள தனது வயல்வெளியில் போர்வீரன் சிற்பம் ஒன்று இருப்பதாகத் ஏழுமலை அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அதனையும் ஆய்வு மேற்கொண்டோம் .
சுமார் 3 அடி உயரம் உள்ள அச்சிற்பம் சதுர் புஜத்துடன் மேல் இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், கீழ் வலக்கரம் அபய முத்திரையில், கீழ் இடது கால இடைமீது ஊறு முத்திரையிலும் உள்ள விஷ்ணு துர்க்கை எனக் கண்டறியப்பட்டது. தலையை ஜடா மகுடம் அலங்கரிக்க கழுத்தில் சரப்பளி மற்றும் சவடி அணிந்து ஆடையாக மார்பு கச்சையும் இடையிலிருந்து பாதம் வரை ஆடையும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறது. இச்சிற்பத்தின் ஆடை அணிகலன்களை வைத்து இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்களின் சிற்பமாகக் கருதலாம். சுமார். 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வெட்டவெளியில் வெயிலுக்கு மழைக்கும் நனைந்து கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்று தெரிவித்தார்.