ஏபிபி செய்தி எதிரொலி: உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தகவல்.

 

தமிழ்நாடு முழுவதும் 13.168 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் 60 சதவீதம் நேரடி விதைப்பு மூலமாகவும் 40 சதவிகிதம் நடவு முறையிலும் விவசாயிகள் தங்களது சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பயிர்களுக்கு உரம் இட வேண்டிய நிலையில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய உரம் முழுமையாக வந்து சேராத காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு  சங்கங்களில் மிகக் கடுமையாக உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் உரக் கடை வியாபாரிகள் உரத்தின் இருப்பை குறைவாக காட்டியும் மேலும் அதிக விலைக்கும் விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்த செய்தி ஏபிபி நாடு செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உரக்கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றாத 101 உர கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழ் நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு உரம் தேவை அதிகரித்துள்ளது. உரவிற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்படுகிறது. விவசாயிகள் கண்காணிப்பு மையத்தை தொடர்பு கொண்டு உரம் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 8ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் 3391 தனியார் உர கடைகளில் வேளாண்மை துறையினரால் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்தல், மற்றும் விற்பனை முனைய கருவி வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



 

இதனையடுத்து உரக் கடைகளில் உரங்களின் புத்தக இருப்பு, உண்மை இருப்பு மற்றும் வித்தியாசம் காணப்பட்ட விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக் கடைகளில் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 6 உர கடைகள் மீது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரிமையாளர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

 

மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும். மாணிய உரங்களை விற்பனை முனைய கருவியில் பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யாத ஒரு உரக்கடை மீது mFMS குறியீட்டு எண் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி விற்பனை முனைய கருவியின் மூலம் விவசாயிகள் ஆதார் எண்ணையும் பயன்படுத்தி உரக் கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். நிர்ணயம் செய்த விற்பனை விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.