மசூதியில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் சத்தத்தால் தன்னுடைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் ஷுக்லா. இவர் பாலியா மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு எழுதிய கடிதத்தில் மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளின் அளவைக் கட்டுப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யப்படுவதால் தன்னால் தியானம் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒலிப்பெருக்கிகளின் அளவை கட்டுப்படுத்தவேண்டுமென அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சங்கீதா வஸ்தவாவும் மசூதிகளில் ஒலிபெருக்கி இல்லாமல் அசான் ஓதப்படலாம் என புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அசான் ஓதப்படுவதால் தனக்கு தூக்கம் கெடுவதாகவும், தூக்கம் கெடுவதால் அன்றைய முழு நாளும் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை எனவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார். மசூதியின் ஒலிபெருக்கியை குறைக்கவேண்டும் அமைச்சரும், ஒலிபெருக்கி இல்லாமல் ஓதவேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தரும் கோரிக்கை வைத்திருப்பது உத்தரபிரதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.