தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வராக பதவியேற்ற பிறகு 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதில் முக்கிய திட்டமான மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்வதாகும். குறிப்பாக கிராமபுறங்களில் இருக்க கூடிய ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருப்பதால் அவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.


அதே சமயம் அவர்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரி செல்ல வேண்டும் என்றால் பேருந்தில் தான் செல்லவேண்டும். ஆகையால் மகளிரின் துன்பத்தை போக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கபட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.




மகளிர் கட்டணம் இல்லா பேருந்து சேவை மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது - திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் 




தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இத்திட்டத்தின்படி அரசு நகர பேருந்துக்களில் பயணம் செய்யும் இல்லத்தரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.


இத்திட்டத்தால், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா, தெலங்கனா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் இதுவரை 24.49 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பு மக்களிடத்திலும், இத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் பெண்கள், வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.


திருச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை, தீரன் நகா், லால்குடி, துவாக்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், உப்பிலியபுரம் மற்றும் கரூர் மண்டலத்தில் முசிறியும், புதுக்கோட்டை மண்டலத்தில் திருச்சி கிளை ஆகிய கிளைகளில் இருந்தும் நகர பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றது.




திருச்சி மாவட்டத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் இதுவரை 24.49 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன், 1.58 லட்சம் திருநங்கைகள் மற்றும் 27.53 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.


பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதாகவும், பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்ததாகவும் அமைந்துள்ளதால், அனைத்துத்தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் தயங்காமல் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.