பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். கடந்த 21-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தமிழன்னை சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தியுடன் தொடங்கிய இந்த பயணம் மேல்மருவத்தூர், புதுச்சேரி, சிதம்பரம், தஞ்சை வழியாக நேற்று திருச்சி வந்தது. இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனரும், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனருமாகிய டாக்டர் ராமதாஸ் பேசியதாவது, உலகில் 7,105 மொழிகள் உள்ளன. இந்தியாவில் 880 மொழிகள் பயன்பாட்டில் உள்ளது. உலகில் 2 ஆயிரம் மொழிகளை ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் தான் பேசுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அளவில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள மொழிகளில் தமிழ் 8-வது இடத்தில் உள்ளதாக ஒரு கூட்டம் அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறது.ஆனால் அத்தகைய தகவல் எதையும் யுெனஸ்கோ அமைப்பு வெளியிடவில்லை. உலகில் உள்ள மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட 13 மொழிகள் தான் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசுகிறார்கள். அந்த 13 மொழிகளில் தமிழ் இடம்பெறவில்லை. உலகம் முழுவதும் தமிழர்களின் எண்ணிக்கை 10 கோடி பேர் வரை உள்ளனர். இனி அனைவரும் தமிழில் தான் பேச வேண்டும். அழிவுகளில் இருந்து தமிழ் மொழியை மீட்க வேண்டும்.
தமிழில் பேசாதவர்களையும் பேச வைக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்ட வேண்டும். திருச்சி மாவட்ட வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு தமிழில் பெயர் பலகை வைத்தால் அடுத்த முறை நான் திருச்சிக்கு வரும்போது, அந்த வணிகர்களுக்கு மலர்கொத்து வழங்குவேன். ஆகவே தமிழக வணிகர்கள் கடைகளின் முன்பு பெயர் பலகையை தமிழில் எழுதுங்கள். அப்படி இல்லையென்றால் அழிப்பதற்காக ஒரு திங்கள் இடைவெளிவிட்டு தமிழகம் முழுவதும் நாங்கள் கருப்பு மை கலந்த வாளி மற்றும் ஏணியை தூக்கி கொண்டு வந்துவிடுவோம். எங்களை அந்த நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் தமிழை காக்க எங்களுக்கும் வேறு வழியில்லை. இது விளம்பரத்துக்காகவோ, வாக்குக்காகவோ அல்ல. இவ்வாறு பேசினார். மேலும் கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்