தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, வரலாற்றில் முதல் முறையாக மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. இதனையடுத்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது.
திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இன்று மாலை கல்லணை இருந்து தண்ணீர் திறக்கபடும் நிகழ்ச்சியில் நான்கு அமைச்சர்கள், ஐந்து மாவட்டகளின் சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் அனைத்து வாய்க்கால்களும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் சிறப்பாக அமைந்ததுள்ளது. வடிகால் வாய்க்கால் கூட இந்த ஆண்டும் சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால், மழை காலங்களிலும் மழைநீர் தங்கள் விளை நிலங்களில் புகாது எனவும், மழைநீரால் பயிர் பாதிக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஜீன் 12 ற்கு முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறக்கபட்டதால் டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல் முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும் என்றும், விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நிலச்சமன்படுத்தும் கருவி மற்றும் நடவு இயந்திரங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன் பிற மாவட்டங்களிலிருந்தும் வரைவழைத்து வழங்கிட வேண்டும் என்றும், வட்டார அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர். குறிப்பாக ஜீன் மாதத்திற்கு முன்பே தண்ணீர் வருவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்,