திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த, சேகர் மற்றும் லக்ஷ்மி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் கண்ணப்பன் வயது (36). இவர் தனது நான்காவது வயதில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் குணமடைந்த பின்புதான் தெரிந்தது இவருக்கு தனது இரு கண்களின் பார்வையும் போய்விட்டது என்று. இதனால் மிகவும் மனமுடைந்த கண்ணப்பன் தனது வீட்டிலேயே தனிமையில் இருந்தார். ஆனால் கண்ணப்பன் தனது சிறுவயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவராக இருந்தார். எனவே, அவரது குறைபாடை பெரிதாக எடுத்துக்கொண்டு நாம் வாழ்வில் துவண்டுபோய் விடக்கூடாது என்று மீண்டும் எழுந்து வந்தார். இதனை அடுத்து கண்ணப்பன் 2004-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு அந்த தொழிலை கற்றுக்கொள்ள தொடங்கினார்.
திருச்சியில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் ஒரு கடையில் சிறுவயதிலேயே வேலைக்குச் சேர்ந்து, தொழிலை முழுமையாக கற்றுக் கொண்டார். அந்த வகையில் சைக்கிள் மற்றும் பைக் போன்ற இரு சக்கர வாகனங்களை பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, அதில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும் அளவுக்கு அவர் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.
கிட்டதட்ட 10 ஆண்டுகளாக, வெவ்வேறு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை களில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் கூட பலரும், அவரது உடலின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவரை கேலி செய்து வந்துள்ளனர். அத்தகைய இன்னல்களை சந்தித்த அவர், மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளான போதும், இந்த சமுதாயத்தில் நாம் நிச்சயம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் போராடினார்.
இதன் காரணமாக, தனது வாழ்வின் அடுத்தக் கட்ட பயணத்தை நோக்கி அவர் செல்ல ஆரம்பித்தார். அதன் தொடக்கமாக 2012-ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையை திருச்சி உறையூர் பகுதியில் தொடங்கினார். ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு பெரிதாக எந்த ஒரு வாகனமும் பழுதுபார்க்க வரவில்லை என்றே கூறினார். காலப்போக்கில் சில வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக வந்தன. அவர் வாகனத்தின் ஒலியை வைத்தே வாகனத்தில் என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாமல், வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டும்போது பின்னால் அமர்ந்து சென்று வாகனத்தின் சத்தத்தை கேட்டு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றது என்பதை, முழுமையாக கண்டுபிடிக்கும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக்கொண்டார். ஆகையால் பொதுமக்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தொடங்கினர். இதனை அடுத்து, கண்ணப்பனுக்கு தினந்தோறும் குறைந்தது 5 முதல் 10 வண்டிகள் பழுது பார்ப்பதற்கு வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நாளடைவில் வாகனங்கள் அதிகரித்ததால் வேலைக்கு ஆள் வைக்க முடிவு செய்த அவர், வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். இதன் காரணமாக ஏழை எளிய இளைஞர்கள் 4 பேரை பணியில் அமர்த்தி அவர்களுக்கும் மாத வருமானம் கொடுத்து வேலை வாய்ப்பை வழங்கினார். மேலும் தனக்கு அன்றாடம் கிடைக்கும் வருமானத்தில் தனக்கு உணவு, கடை வாடகை போன்ற செலவு போக மற்றவற்றை அந்த இளைஞர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.
இதனை தொடர்ந்து மன உறுதியுடன் இருக்கும் கண்ணப்பனிடம் அவரது இந்த பயணத்தை பற்றி கேட்டபோது, தனக்கு குறைபாடு இருந்தபோதும் வாழ்க்கையின் இலட்சியம் என்பது தனது குறையை பெரிதாக காட்டவில்லை. அதன் காரணமாகவே மீண்டும் எழுந்து வர முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தொடர்ந்து பேசிய கண்ணப்பன். மேலும் ஏழை இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருவதாக கூறினார். மேலும் தனது நிலைமையை கருத்தில் கொண்டு இதுவரை திருமணம் செய்யவில்லை என்றும், வாழும் வரை தன்னைப்போல் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார். மேலும் உடலில் குறைகள் இருக்கும் தன்னைப் போன்றவர்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் தனது லட்சியத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. மன உறுதியுடன் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இரு பார்வையும் இழந்த கண்ணப்பன் தனது மனது உறுதியோடு தனது சொந்தக் காலில் நின்று அவரது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.