தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.. 


விநாயகர் சிலையை நிறுவுவதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும். மேலும் அதற்கான படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கக்கூடிய இடம் தனியார், மாநகராட்சி மற்றும் அரசாங்கமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களிடம் விழா அமைப்பாளர்கள் முறையான அனுமதி கடிதம் பெற்று விநாயகர் சிலை அமைக்க வேண்டும்.


விநாயகர் சிலை அமைக்கப்படும் இடங்களில் போடப்படும் மேற்கூரை எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கீத்து, ஒலை, கம்பு போன்றவற்றால் அமைக்கக்கூடாது. தகரம் போன்றவற்றால் மேற்கூரை அமைக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்படும் அனைத்து இடங்களிலும் மேற்கூரை போடப்பட வேண்டும். அந்த மேற்கூரை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் அமைக்கப்படக்கூடாது.


குறிப்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விநாயகர் சிலை அமைக்கிற இடங்களின் அருகில் வைக்கக்கூடாது. மேலும் தீப்பற்றினால் அவற்றை அணைப்பதற்கு தேவையான தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


சிலையின் பாதுகாப்பிற்காக இரண்டு தன்னார்வலர்களை சுழற்சி முறையில் விழா அமைப்பாளர்கள் நியமிக்க வேண்டும். ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தை விழா அமைப்பாளர்கள் அரசு குறிப்பிட்ட அளவு மட்டுமே வைக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிப்பெருக்கி அளவு இருக்க வேண்டும். காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.


மேலும், விழா அமைப்பாளர்கள் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நேரத்தை கடைபிடிக்க வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை முடிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஊர்வலத்தை மாலை 3 அல்லது 4 மணிக்கு தொடங்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். 




இராசயன பூசிய விநாயகர் சிலைகள் அமைக்கப்படக்கூடாது


ஊர்வலம் இடையில் நிறுத்தப்படாமல் விரைவாக கரைக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். விழா அமைப்பாளர்கள் ஊர்வலத்தின் போது அவர்களது குழுவினரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு சிறு பிரச்சனையும் இல்லாமல் ஊர்வலம் செல்வதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.


விநாயகர் சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதை விழா அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இராசயனப் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் அமைக்கப்படக்கூடாது. இதை தவிர்க்க வேண்டும்.


குறிப்பாக வழிபாட்டுதலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே விநாயகர் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். 


மற்ற மதங்களை துன்புறுத்துவது பற்றியோ வகுப்புவாத வெறுப்பு மற்றும் பிற மதங்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் எழுப்பப்படும் முழக்கங்களை எந்த காரணம் கொண்டு அனுமதிக்கக்கூடாது.


சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்லும் போது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். 3 சக்கர வாகனம் மற்றும் மாட்டு வண்டியில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து வரக்கூடாது.


ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக எந்தவிதமான விளம்பர பலகைகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.


விழா அமைப்பாளர்கள் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களின் அருகே சிசிடிவி கேமரா வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.


விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் மின் வசதி போதிய பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். 




மதுபோதையில் உள்ளவர்கள் ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள கூடாது


மேலும், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பெட்டி வடிவிலான ஒலிப்பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கொடுக்கும் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகளை விழா அமைப்பினர் முறையாக பின்பற்ற வேண்டும்.


பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் விநாயகர் சிலைகள் நிறுவப்பட வேண்டும் மற்றும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும்.


சாமி கும்பிடும் போது அமைப்பாளர்கள் யாரும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


குறிப்பிட்ட தேதி மற்றும் நேரங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முடிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதை மீறினால் சிலை அகற்றப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.


விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். மது போதையில் உள்ளவர்கள் ஊர்வலத்தின் போது அனுமதிக்க கூடாது இதனை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும். புதிதாக எந்த இடத்திற்கும் விநாயகர் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி  தெரிவித்துள்ளார்.