2022 ஆம் ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று தொடங்குகிறது. 


வைகுண்ட ஏகாதசி


கீதாசார்யனின் அமுதமொழியான “மாதங்களில் நான் மார்கழி” என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி இரண்டு அசுரர்களை அடிப்படிடையாக கொண்டு தோன்றியது என புராணங்கள் கூறுகிறது. இந்நாளில் பெருமாளை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்கள் கிடைக்கும் என்றும், முடிவில் வைகுண்ட பதவியையும் பெறுவார்கள் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. 


ஸ்ரீரங்கநாதர் ஆலயம்:


அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று இரவு தொடங்குகிறது.  திருமாலுக்கு 108 திவ்ய தேசங்கள் இருக்கும் நிலையில் வைகுண்டத்திற்கு இணையாக பூலோகத்தில் கருதப்படுவது 2 இடங்கள் தான். ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் . மற்றொன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும் ஆகும். 


அனைத்து வைணவ தங்களிலும் இந்நாளில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டாலும் இந்த ஒரு கோயில்களிலும் நடைபெறும்  வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்றது. இதனை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.  21 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் நாளை (டிசம்பர் 23) முதல் பகல் பத்து திருநாள் தொடங்குகிறது.


ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபெறும் பகல்பத்து நிகழ்வில் மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிக் கொடுப்பார். இதில் பிரசித்திப் பெற்ற மோகினி அலங்காரம் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 


களைகட்டும் சொர்க்கவாசல் திறப்பு:


 வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. அன்றில் இருந்து ராப்பத்து திருநாள் நிகழ்வுகள் நடைபெறும். அதேபோல் ஜனவரி 8 ஆம் தேதி திருக்கைத்தல சேவை, 9 ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி, 11 ஆம் தேதி  ராப்பத்து நிறைவும், தீர்த்தவாரியும் நடக்கிறது. 12 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறுகிறது.