சென்னை தாழம்பூரைச் சேர்ந்த சீனிவாசன்(வயது 63) என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னையில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் அவருக்கு ரூ.2.5 லட்சம் வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:- கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் புகார்தாரர் அவரது 96 வயதான தந்தையை சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள நந்தினி மூத்த குடிமக்கள் இல்லம் முதியோர் இல்லத்தில் ரூ.1,50,000 முன்பணமாக வைப்புத்தொகை செலுத்தி சேர்த்துள்ளார். மேலும் மாதம் ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் நான்கு மாதங்களுக்கு பராமரிப்பு கட்டணம் செலுத்தியுள்ளார். அதே ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் தமது தந்தைக்கு உடல்நிலை மோசமானதாக கூறி முதியோர் இல்ல நிர்வாகம் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டது என்று சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு புகார்தாரர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.




இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு புகார்தாரருக்கு அவர் முன்பண வைப்புத் தொகையாக செலுத்திய ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை 2016 ஜூலை முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்கவும், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கவும் முதியோர் இல்ல நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முதியோர்களை பராமரிக்கும் சேவை இல்லங்களை நடத்தி வருபவர்கள் 2009-ம் ஆண்டைய தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் விதிகளை பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் சார்பில் 2016 பிப்ரவரி மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் வெளியிடப்பட்ட இரண்டு அரசாணைகளின்படி மாவட்ட கலெக்டரிடம் உரிமம் பெற்று தகுந்த உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் வசதிகளை ஏற்படுத்தி முதியோர் இல்லங்கள் நடத்தப்படவேண்டும்.




மேலும்  வழக்கு விசாரணையின்போது முதியோர் இல்ல நிர்வாகிகள் தங்கள் தரப்பில் முதியோர் இல்லம் நடத்துவதற்கு பெற்ற உரிமம், இல்லத்தில் உள்ள வசதிகள், சேர்க்கை மற்றும் பராமரிப்பு விதிகளை சமர்ப்பிக்கவில்லை என்பதால் இந்த நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்தை நான்கு வாரங்களுக்குள் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று சென்னை மாவட்ட கலெக்டருக்கு ஆணையம் தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.