தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக மாலை முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு -13.90 மில்லி மீட்டர் ஆகும். லால்குடி, புள்ளம்பாடி பகுதியில் 9.40 மில்லி மீட்டர், மண்ணச்சநல்லூர் தேவி மங்கலம் 31.00 மி.மீ, சமயபுரம் 37.40 மி.மீ, மருங்காபுரி 4.20 மி.மீ, முசிறி புலிவலம் 20.00 மி.மீ, ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டு 17.60 மி.மீ, துறையூர் 1.மி.மீ,, கோல்டன் ராக் 34.30 மி.மீ, ஜங்ஷன் 31.00 மி.மீ, திருச்சி நகரம் 48.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பல்வேறு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி அருகே மாலை இடியுடன் பெய்த பலத்த மழையில் இடி மின்னல் தாக்கி இருவேறு இடங்களில் வேலை பார்த்த ஒரு பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் ஒருவர் காயமடைந்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் வேலாயுதம் (60) அதே பகுதியை சேர்ந்த பாண்டு மகன் சங்கர் (55) உட்பட சிலர் திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் அடுத்துள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் தங்கி விவசாய கூலியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது வேலை பார்த்தவர்கள் கரையில் மழைக்கு ஒதுங்குவதற்காக வந்தபோது வேலாயுதம் மற்றும் சங்கர் இருவரையும் இடி மின்னல் பலமாக தாக்கியது. இதில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் இந்தலூர் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் (45) இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களுடன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கிளியூர் பகுதியில் சம்பா நாற்று நடும் பணி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது இடி மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வேலாயுதம் மற்றும் ரங்கம்மாள் ஆகியோரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.