திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பெட்ரோல் பங்க்கிற்காக கிராவல் மண் கடத்திய 3 டிப்பர் லாரி, 2 பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஓட்டுநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் உட்பட 4 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகர். இவரது சொந்த ஊரான பளுவஞ்சி அருகே உள்ள கல்லாமேடு பகுதியில் தனது மகள் மோகனா பெயரில் புதிதாக ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் பெற்று உள்ளார். இந்த இடம் பள்ளமான பகுதியாக இருந்ததால் அதில் மண்ணைக் கொட்டி மேடாகும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சொரியம்பட்டி அருகே தனது தந்தை ராமசாமி பெயரில் உள்ள பட்டா நிலத்தில் இருந்து கிராவல் மண்ணை பொக்லைன் மூலம் வெட்டி எடுத்து பெட்ரோல் பங்க் அமைய உள்ள இடத்தில் கொட்டி மேடாகும் முயற்சியில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசின் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று காவல்துறையினர் சொரியம்பட்டியில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் இடத்திற்கு சென்ற போது 2 பொக்லைன் மூலம் 3 டிப்பர் லாரிகளில் மண் வெட்டி கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து 5 வாகனங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கல்லாமேட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கான இடத்தில் நிறுத்தினர். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் குவிந்தனர். வாகனங்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் மணப்பாறை, துவரங்குறிச்சி, வையம்பட்டி, பகுதியில் இருந்து கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையின் பணிகளுக்கு தொந்தரவாக யாரேனும் வரும் பட்சத்தில் அரசு பணியை செய்ய விடாமல் தடுப்பதற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் எனவும், கொரோனா பரவலுக்கு காரணமாக முகக் கவசங்கள் அணியாமல், இங்கு சட்டவிரோதமாக கூடி நிற்பவர்கள் மற்றும் சட்ட விதிமுறை மீறல்களுக்கு ஆளாகியுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததோடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறி தடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதன் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் வளநாடு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. திருட்டுத்தனமாக கிராவல் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொக்லைன் உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், காவல்காரன்பட்டி சுரேஷ், ஆரியக்கோன்பட்டி ஆறுமுகம், உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்தும், சீரங்கம் பட்டி ஆறுமுகம் (38), ஆரியக்கோன்பட்டி பன்னீர்செல்வம் (21), ஆரியப்பட்டி செல்வராஜ் (23), தாதமலைப்பட்டி கண்ணன் (50), உள்பட 4 ஓட்டுனர்களை கைது செய்தும். வளநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பதிவெண் இன்றி கைப்பற்றப்பட்ட ஒரு பொக்லைன் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.