உலக பட்டினி தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் கட்சியின் நிர்வாகிகள் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கினர்.

  


விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் என உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் கட்சி ரீதியான பதவிகள் வழங்குவது, பூத் கமிட்டி அமைப்பது, ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தமிழக வெற்றி கழகம் சார்பாக வழக்கறிஞர்கள் நியமிப்பது என அரசியல் நகர்வை தீவிரப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.


அதேசமயம் மக்களுக்கு தேவையான உதவிகளை முதலில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.




தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக நடிகர் விஜய் பதவி ஏற்பார்.


இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும். நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, இன்று திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டம் சார்பாக பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. 


திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகம் மத்திய மாவட்டம் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 500 பேருக்கு இலவசமாக பிரியாணி , முட்டை போன்ற உணவு  வழங்கப்பட்டது. பின்னர் செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:




தமிழக வெற்றி கழகத்திற்கு திருச்சி திருப்புமுனையாக அமையும்..


தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி இல்லாதவர்களுக்கு உணவு வழங்கினோம். இந்த பகுதியில் மட்டும் 500 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் கோடை வெயிலின் தாக்கத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை நிலவிய போது, இலவச நீர் மோர் பந்தல், திருச்சி மாநகர் முழுவதும் ஆங்காங்கே நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு மோர், இளநீர் போன்ற குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.எங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து செய்து வருகிறோம். 


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி முழுமையாக எங்களை அர்ப்பணித்து பணியாற்றுவோம். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக நடிகர் விஜய் அவர்கள் பதவி ஏற்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 




தமிழக வெற்றி கழகத்தில் யாரு வேண்டுமானாலும், இணையலாம் தலைவர் விஜய் என்ன சொல்கிறாரோ அதை கட்டளையாக ஏற்று நாங்கள் செயல்படுவோம். தலைவரின் கருத்தே எங்களுடைய கருத்தாகும். திரைத் துறையில் இருந்து அரசியலில் நுழைந்து ஆட்சி செய்த எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி செய்ய நடிகர் விஜய்க்கு மட்டுமே தகுதி உள்ளது. எங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள் ஏதுமில்லை. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




தமிழக வெற்றி கழகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது


இதேபோல் திருச்சி பழைய மதுரை சாலையில் அமைந்துள்ள நத்தர்ஷாபள்ளிவாசல் பகுதியில் தமிழக வெற்றி கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் பொருளாளர் மூர்த்தி தலைமையில் 100 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை  முன்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கார்த்தி ஏற்பாட்டில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி, ஸ்வீட், முட்டை மாசல் ஆகியவை பரிமாறப்பட்டன இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின்  உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெற்றனர். 


இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் A.S ராஜா, R.K ரிஷி, மெடிக்கல் சதீஷ், ஆரோக்கியசாமி, கல்பனா, தெறி ராஜேஷ், கணேஷ்,E.B.ரோடு கார்த்திக் , பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்