நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம், ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சுங்கக்கட்டண உயர்வு:
இந்த சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம், பரனூர், சேலம் - ஆத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. திருத்தணி – பட்டரைபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுங்கசாவடிகளிலும் கட்டணம் உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூர் - பள்ளிகொண்டா, வாணியம்பாடி உள்ளிட்ட வழிதடங்களிலும் திருச்சி - சிட்டம்பட்டி, மதுரை - பூதக்குடி உள்ளிட்ட வழித்தடங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.
இந்நிலையில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து சங்கசாவடியை மறித்து விளம்பர பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய அர்சை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். மேலும் இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்:
சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும், இதனால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசின் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்கத்தின் கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் ஆறுமுகம் தலைமை வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார்குடி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டும் தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் வழியை மரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. ஆர்ப்பாட்டம் செய்வது என்றால் ஒரு இடத்தில் நின்று ஒதுங்கி ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று கூறியதை தொடர்ந்து தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் இரண்டு பாதையை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.