Pudukkottai: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.92 லட்சம் மோசடி - 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.92 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 3 பேர் கைது.

Continues below advertisement

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாட்டுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 21). இவர் டிப்ளமோ எலக்ட்ரானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரிடம் திருமயம் பகுதியை சோ்ந்த சந்தோஷ்ராஜா (29) அறிமுகமானார். அவரிடம் பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அங்கு தனக்கு ஆள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இதேபோல் அறந்தாங்கி பகுதியை சோ்ந்த பட்டதாரிகள் சிலரிடம் தெரிவித்து உள்ளார். இதனை நம்பி பலர் பணம் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு பணம் பெற்றவர்களிடம் சிலரை மட்டும் ரஷியா, கிர்கிஸ்தான் நாட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் அங்கிருந்து அவர்களை பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்லவில்லை. இதனால் அவர்கள் அங்கேயே தவித்து உள்ளனர். பின்னர் ஊரில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் விமான டிக்கெட் எடுத்து அதன் பிறகு சொந்த ஊர் திரும்பினர். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பேர் ஏமாந்து திரும்பினர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். இவர்களிடம் மொத்தம் ரூ.92 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்ராஜாவை கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆட்லின் வினோ மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்ததாகவும், அவர் கூறியபடி பணத்தை வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பணத்தை ஆட்லின் வினோவின் மனைவியான நிவேதா (26) வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், மதுரையை சேர்ந்த ராஜ்கமல் (40) என்பவரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Continues below advertisement


மேலும் இதையடுத்து நிவேதா, ராஜ்கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. மேலும் இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- சந்தோஷ்ராஜாவுக்கு முகநூல் மூலமாக ஆட்லின் வினோ பழக்கமாகி இருக்கிறார். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் இட்டானியாகும். பிரான்சில் இருந்தப்படியே அவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். அங்கு அவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே 2 பேருக்கு வேலை வாங்கி கொடுத்ததால் சந்தோஷ் ராஜா அவரை நம்பி பிறருக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அதன்பின் இதனை மோசடி தொழிலாக மாற்றி பணம் சம்பாதித்துள்ளனர். படிப்புக்கு தகுந்தாற் போல் வேலை என்று தான் முதலில் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்துள்ளனர். ஆட்லின் வினோ மனைவி கன்னியாகுமரியில் தான் உள்ளார். அவரது வங்கி கணக்கிற்கு தான் பணம் அனைத்தும் சென்றுள்ளது. இதனால் அவரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான ஆட்லின் வினோவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

Continues below advertisement